உரிமம் இல்லாமல் கடன் கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் காவல்துறை அதிகாரிகள் 93 பேரை விசாரிக்கின்றனர். அவர்கள் 13 முதல் 67 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.
இம்மாதம் 9ஆம் தேதியிலிருந்து 15ஆம் தேதி வரை நீடித்த அதிகாரிகளின் ஒரு வார சோதனை நடவடிக்கைகள்மூலம் சந்தேக நபர்கள் பிடிபட்டனர்.
ஆரம்பகட்ட விசாரணையில் உரிமம் இல்லாமல் ஒருவர் கடன் கொடுப்பவராகச் செயல்பட்டதாகவும் 7 பேர் கடன் வாங்கியவர்களுக்கு அவர்களின் இல்லத்தில் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
தானியக்க இயந்திரங்களில் பணப் பரிவர்த்தனை செய்தது போன்ற செயல்கள் மூலம் உரிமம் இல்லாமல் கடன் கொடுக்கும் நடவடிக்கைகளுக்கு 43 பேர் உடந்தையாக இருந்ததாய் நம்பப்படுகிறது.
எஞ்சிய 42 பேர் வங்கிக் கணக்குகளைத் திறந்து உரிமம் இல்லாமல் கடன் கொடுப்போருக்குப் பண பரிவர்த்தனை விவரங்களையும் தனிப்பட்ட அடையாள அட்டை விவரங்களையும் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
அதிகாரிகளின் விசாரணை தொடர்கிறது.
உரிமம் இல்லாமல் கடன் கொடுப்போர் கடன் வாங்கியோருக்கும் அவர்களின் குடும்பத்துக்கும் எதிராக ஆபத்தான முறையில் தொந்தரவு தரத் தயங்கமாட்டார்கள் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.
கடன் வாங்கியோரின் வீடுகளுக்குத் தீ மூட்டுவது, சாயம் ஊற்றுவது, அவர்களின் வாசலையோ சைக்கிளையோ சங்கிலிகளால் பூட்டுவது ஆகியவை அந்தத் தொந்தரவுகளில் அடங்கும்.