தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காஸா மக்களுக்கு உதவ உள்ளூர் அறநிறுவனம் நிதித் திரட்டு

2 mins read
1e98b97e-4a3f-44f4-910c-cb9eec652c07
2024ஆம் ஆண்டில் காஸா மக்களுக்குத் உடனடியாகத் தேவைப்பட்ட அத்தியாவசியப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அதற்கான பணிகளில் ‘ஹியூமேனிட்டி மேட்டர்ஸ்’ மற்றும் ரஹ்மத்தான் லில் அலாமின் அறநிறுவனத்தைச் சேர்ந்த ஏறத்தாழ 300 தொண்டூழியர்கள் தீவிரமாகச் செயல்பட்டனர் - படம்: சாவ்பாவ்

காஸாவில் போரால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள், குடும்பங்களுக்கு உதவும் இலக்குடன் சிங்கப்பூர் அறநிறுவனமான ரஹ்மத்தான் லில் அலாமின் மீண்டும் நிதித் திரட்டில் இறங்கியுள்ளது.

இதுவே அதன் நான்காவது நிதித் திரட்டு முயற்சியாகும்.

காஸா மக்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவ சாதனங்கள், சுகாதாரப் பராமரிப்புச் சேவை, கல்வி தொடர்பான ஆதரவு ஆகியவற்றை வழங்குவதில் கவனம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

நிதித் திரட்டு பிப்ரவரி 24ஆம் தேதியன்று தொடங்கியது.

அது ஏப்ரல் 6ஆம் தேதி நிறைவுபெறும்.

“போர் நிறுத்தம் மகிழ்ச்சியைத் தருகிறது. காஸா மக்களுக்கு உடனடியாகக் கூடுதல் உதவி தேவைப்படுகிறது,” என்று அறநிறுவனம் திங்கட்கிழமை (பிப்ரவரி 24) தெரிவித்தது.

2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே போர் நடந்து வந்தது.

இந்நிலையில் ஆறு வார போர் நிறுத்தத்துக்கு ஜனவரியில் இணக்கம் காணப்பட்டது.

போர் காரணமாக ஏறத்தாழ 1.9 மில்லியன் காஸா மக்கள் தங்கள் வசிப்பிடங்கள், உடைமைகளை இழந்து தவிக்கின்றனர்.

காஸா மக்களுக்கு உதவி வழங்க ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் சிறார் நிதிப் பிரிவு, எகிப்தின் செம்பிறைச் சங்கம், சிங்கப்பூர் அமைப்பான ஹியூமேனிட்டி மேட்டர்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து ரஹ்மத்தான் லில் அலாமின் அறநிறுவனம் செயல்பட்டு வருகிறது.

M3@Towns அமைப்புடன் இணைந்து ரஹ்மத்தான் லில் அலாமின் அறநிறுவனம் இந்த நிதித் திரட்டை ஒருங்கிணைக்கிறது.

இது அந்த அமைப்பின் எஸ்ஜி சமூகத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

சுய உதவிக் குழுவான மெண்டாக்கி, சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம், மக்கள் கழகத்தின் மலாய் நற்பணிப் பேரவை ஆகியவை இணைந்து M3@Towns அமைப்பைத் தொடங்கியுள்ளன.

காஸா மக்களுக்கு உதவிசெய்ய மார்ச் 7லிருந்து 14ஆம் தேதி வரை சிங்கப்பூரில் உள்ள பள்ளிவாசல்களில் நன்கொடைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும்.

குறிப்புச் சொற்கள்