சிறுவர்களைப் பரவசப்படுத்தும் உள்ளூர்த் தமிழ் நாவல்கள்

மர்மம், கற்பனை கலந்த உலகங்களுக்கு சிறுவர்களை அழைத்துச் செல்லும் வல்லமை உடையவை, புதிதாக வெளிவந்துள்ள சிங்கப்பூர் தமிழ்ச் சிறுவர் நாவல்கள். உள்ளூர் எழுத்தாளர்களால் எழுதப்பட்ட ‘காணாமல் போன கிழங்கு பாட்டி’, ‘டிராகனைத் தேடி,’ ‘அகிவா’ ஆகிய மூன்று தமிழ் நாவல்களையும் தேசிய கலைகள் மன்றமும் சிங்கப்பூர் புத்தக மன்றமும் கடந்தாண்டு இணைந்து வெளியிட்டன. எட்டு முதல் பன்னிரண்டு வயது வரையிலான மாணவ வாசகர்களை இம்முயற்சி மையப்படுத்தியது.

சிறுவர்களிடையே குறைந்து வரும் தமிழ்ப் புழக்கத்தை இதுபோன்ற நூல்கள் தூண்டும் எனும் நம்பிக்கையில் உள்ளார், காணாமல் போன கிழங்கு பாட்டியின் நூலாசிரியர் முனைவர் உமையாளம்பிகை ராமகிருஷ்ணன். இது அவரின் முதல் நூலாகும்.

காணாமல் போன கிழங்கு பாட்டி படம்: கிரிம்சன் எர்த்

20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியப்பணியில் இருந்து வரும் அவர், சிறுவயது, பதின்ம வயது மாணவர்களோடு தொடர்ந்து பயணித்தவர். அவர்களின் விருப்பு வெறுப்புகள், வாசிப்புப் பழக்கங்கள் முதலியவை அவருக்கு நன்கு பரிச்சயமானவையே. கற்பனை கதைகளால் கவரப்படும் சிறுவர்களின் போக்கிற்கு ஏற்ப, காய்கறிகளையும் பழங்களையும் கதாபாத்திரங்களாக வடிவமைத்து ஒரு மர்மக் கதையை உருவாக்கி உள்ளார் முனைவர் உமையாளம்பிகை.

தமது 14 வயது மகனுக்கு சிறுவயதில் தமிழ்ப் புத்தகங்கள் தேடும்போது ஏற்பட்ட சிரமங்களை அவர் நினைவுகூர்ந்தார்.

“தெனாலிராமன் போன்ற ராஜா ராணி கதைகளில் ஊர் பெயர்கள், மன்னர் பெயர்கள் என கடினமான சொற்கள் இருக்கும். அவை எளிதில் தொடர்புபடுத்திக் கொள்ள முடியாதபடியும் இருக்கும். இயல்பாகவே சிறுவர்கள் பெரும்பாலானோருக்கு கவனச்சிதறல்கள் அதிகம் உண்டு. ஆகவே, சிறுவர்களுக்கு சுவாரசியமாகவும், எளிமையாகவும் இக்கதையை எழுத நினைத்தேன்,” என்றார் முனைவர் உமையாளம்பிகை.

நல்ல நட்பு, குழு உணர்வு, பிறருக்கு உதவுதல், முதலிய விழுமியங்களைச் சொல்லாமல் சொல்ல முயன்றுள்ளன இந்நாவலின் கதாபாத்திரங்கள். நாட்டின் பிறந்தநாளுக்காக நடக்கும் வானவேடிக்கைகளை கிழங்குப் பாட்டி கவனிப்பதுபோன்ற காட்சிகளில், சிங்கப்பூரைக் குறிக்கும் சில தகவல்களையும் இந்நாவலில் ஆங்காங்கே காணலாம்.

இந்நாவலை வடிவமைக்கும்போது முனைவர் உமையாளம்பிகை சந்தித்த பல சவால்கள், சிறுவர் நாவல்களில் தேவைப்படும் கவனமும் விழிப்புணர்வும் உணர்த்தியது. உதாரணத்திற்கு, உடல் வாகு குறித்த வர்ணனைகளில் அதிக கவனம் தேவை. குறிப்பிட்ட உடல் தோற்றங்கள்தான் அழகானவை என சிறுவர் வாசகர்கள் உணரக்கூடாது. இத்தகைய நுட்பங்களை மூன்று நாவல்களும் கொண்டுள்ளன.

டிராகனைத் தேடி படம்: கிரிம்சன் எர்த்

டிராகனைத் தேடி எனும் நூல் சிறுவர்களை ஒரு சாகசப் பயணத்தில் கூட்டி செல்கிறது. இளவரசன் விஜயனின் தங்கை ஒரு கொடிய டிராகனால் கடத்தப்படுகிறாள். நூலாசிரியர் திருவாட்டி ஜான்சிராணி தங்கவேலின் கற்பனை வளத்தில் உருவான இக்கதை நட்பு, குடும்ப உறவுகளை அழகாக காட்டுகிறது.

அருகி வரும் பறவை இனங்களை சிறுவர்கள் மீட்டெடுக்கும் ஒரு கதைதான் ‘அகிவா’. இப்பயணத்தில் பல புதுப்புது அனுபவங்களை நண்பர்கள் இணைந்து எதிர்நோக்குவதை சுவாரசிய முறையில் அணுகுகிறது, திருவாட்டி சவிதா ராமசாமியின் இந்நூல்.

அகிவா படம்: கிரிம்சன் எர்த்

இளம் வயது மாணவர்கள் பருகும் வெளி தகவல்கள் பல அவர்களின் மனதில் ஆழ பதிந்துவிடுகின்றன. அவையே அவர்களின் நம்பிக்கைகளையும் நடவடிக்கைகளையும் பாதிக்கின்றன. அவ்வகையில், சிறுவர் நூலாசிரியர்களுக்கு முக்கியமான பொறுப்பு உள்ளதை முனைர் உமையாளம்பிகை சுட்டினார். அதே சமயம், சிறுவர்களின் ரசனை கடந்த ஆண்டுகளில் உருமாறி உள்ளதையும் அவர் கவனித்தார்.

தமிழ்ச் சிறுவர் நூல்களில் அதிகம் இடம்பெறும் குறைவற்ற கதாபாத்திரங்களைவிட, தி டயரி ஆஃப் தி விம்பி கிட் முதலிய பிரபல நூல்களில் உள்ள இயல்பான கதாபாத்திரங்களை சிறுவர்கள் விரும்புவதாக கூறினார் முனைவர் உமையாளம்பிகை. தங்களின் அன்றாட நடவடிக்கைகளோடு, எண்ணங்களோடு தொடர்புபடுத்திக்கொள்ள இத்தகைய கதாபாத்திரங்களே உதவுகின்றன. திரைப்படங்கள், சமூக ஊடகம் ஆகியவற்றில் அதிக ஈடுபாடு கொண்டுள்ள இன்றைய சிறுவர்கள் நடைமுறை சித்தரிப்புகளையும் அதிகம் விரும்புவதாக தெரிகிறது.

கருத்துக்கள் ஆழமாக இருக்கவேண்டும்; ஆனால், சொற்கள் எளிமையாக இருக்கவேண்டும். இவ்வகையில் பெரிய வாழ்க்கை படிப்பினைகளை சிறுவர்களுக்குப் புரியுமாறு படைக்கப்பட்டுள்ள இந்நூல்கள் ‘ஹைலோ’ நூல்கள் என அறியப்படுகின்றன.

உள்ளூர் ஹைலோ நூல்கள் சிங்கப்பூரில் குறைவாகவே உள்ளன. தாய்மொழிகளில் இவை குறிப்பாக குறைந்த எண்ணிக்கையில் உள்ளதை கண்டறிந்தது சிங்கப்பூர் புத்தக மன்றம். தற்போது உள்ள தமிழ்ச் சிறுவர் புத்தகங்கள் பெரும்பாலும் இந்தியாவிலிருந்து வந்தவை என்றும், அவை சிறுவர்களுக்கு சிலசமயம் பொருத்தமாக இருப்பதில்லை என்றும் அது தெரிவித்தது. எனவே, இக்குறையைத் தீர்த்து வைப்பதற்கான ஒரு படியாக இந்நாவல்களின் வெளியீட்டை அது கருதுகிறது. மூன்று தமிழ் நாவல்கள் உட்பட 10 தாய்மொழி புத்தகங்களை அது வெளியிட்டது.

சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவின் ஓர் அங்கமாக கடந்தாண்டு நவம்பரில் இடம்பெற்ற இந்த நூல் வெளியீட்டில் உள்துறை, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுகளின் துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார். சிங்கப்பூரில் பெரும்பாலான வீடுகளில் ஆங்கிலப் புழக்கம் அதிகரித்து வருவதை குறிப்பிட்ட அவர், இதுபோன்ற உள்ளூர் தாய்மொழி புத்தகங்கள் தாய்மொழிப் புழக்கத்தை உயர்த்தும் என கூறினார். மொழியோடு இணைந்ததே பண்பாடு. அவ்வகையில், கலாசாரக் கூறுகளையும் சிறுவர்களிடையே இளம் வயதில் கொண்டு சேர்க்கலாம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

உள்ளூர் எழுத்தாளர்கள் இவ்வயதினருக்காக மென்மேலும் படைக்கவேண்டும், இளம் பிள்ளைகள் மென்மேலும் கதை படித்து பழகவேண்டும் எனும் நோக்கில் உருவானதே ‘பியோண்ட் வர்ட்ஸ்’. இத்திட்டம் ஆர்வமுள்ள எழுத்தாளர்கள் குறைந்தபட்சம் ஏழு அத்தியாயங்களும் 10,000 சொற்களும் கொண்ட நாவல்களை எழுதுவதற்கு பயிற்சியும் வழிகாட்டுதலும் அளித்தது. வெளியூர் எழுத்தாளர்களுடனான கலந்துரையாடல்கள், ஒராண்டு கால பயிற்சிக்குப் பின்னர் உள்ளூர் நூலாசிரியர்களால் எழுதப்பட்ட நாவல்களை வெளியிடவும் இத்திட்டம் ஆதரவளித்தது. உள்ளூர் கிரிம்சன் எர்த் நிறுவனம் தமிழ்ப் புத்தகங்களை வெளியிட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!