சென்ற ஆண்டு தீ விபத்துகளில் காயமடைந்தோர் எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் அதிகரித்ததாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியுள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டு 80 பேர் தீ விபத்துகளில் காயமடைந்த நிலையில், 2025ல் அந்த எண்ணிக்கை 94ஆக அதிகரித்தது.
புதன்கிழமையன்று வெளியிடப்பட்ட 2025ஆம் ஆண்டுக்கான அவசர மருத்துவச் சேவைகள், தீ விபத்து, அமலாக்கப் புள்ளிவிவர அறிக்கையில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது.
தீ விபத்துகளின் எண்ணிக்கை மூன்று விழுக்காடு அதிகரித்துள்ள நிலையில், கவனிக்கப்படாமல் விடப்பட்ட சமையல், மின்சாரக் கோளாறுகள் ஆகியவை வீடுகளில் ஏற்படும் தீ விபத்துகளுக்கு முக்கியக் காரணங்களாகத் தொடர்ந்து அமைகின்றன.
கடந்த ஆண்டில் தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆறு என்று அறிக்கை சுட்டியது.
அதில், ஹவ்காங், ரிவர் வேலி ரோடு, புக்கிட் மேரா ஆகிய இடங்களில் நடைபெற்ற தீச்சம்பவங்களும் அடங்கும் என்று கூறப்பட்டது.
2024ஆம் ஆண்டில் ஒரேயொரு மின்சார வாகனம் தீப்பிடித்தது. 2025ல் அந்த எண்ணிக்கை நான்காக அதிகரித்தது. அவற்றில் மூன்று, மின்கலத்தில் (battery) ஏற்பட்ட மின்சாரக் கோளாறு காரணமாக நிகழ்ந்தவையென்று அறிக்கை கூறியது.
அவசர மருத்துவச் சேவை
கடந்த ஆண்டில் நாளொன்றுக்கு 705 அவசர மருத்துவச் சேவை (EMS) அழைப்புகளுக்குப் பதிலளித்ததாகவும், இது கடந்த ஆண்டை விட 4.8 விழுக்காடு அதிகம் என்றும் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
குறிப்பாக, இவற்றில் கிட்டத்தட்ட பாதி, 65 வயதைக் கடந்த மூத்தோர் தொடர்பானவை என்று தெரியவந்தது. மக்கள் தொகை மூப்படைந்து வருவதால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் அவசர அழைப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
அவசர அழைப்புகள் பெரும்பாலும் நெஞ்சு வலி, மூச்சுத் திணறல், மயக்கம், மாரடைப்பு போன்ற மருத்துவச் சிக்கல்கள் தொடர்பானவை என்றாலும், விபத்துகள் தொடர்பான அழைப்புகளின் எண்ணிக்கை 12.3 விழுக்காடு அதிகரித்ததை அறிக்கை சுட்டியது.
சமூகப் பங்களிப்பு
மாரடைப்பு, சிறிய தீ விபத்து ஆகியவற்றில் சமூகத்தில் விரைந்து உதவுவோருக்கான திட்டம் (COMMUNITY FIRST RESPONDERS - CFRP) வழங்கிய ஆதரவுகள் 72.4 விழுக்காடாக அதிகரித்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை அறிக்கை கூறியது.
கடந்த 2015ஆம் ஆண்டு அறிமுகம் கண்ட ‘மை ரெஸ்பாண்டர்’ செயலி மூலம் தொண்டூழியர்கள் பதிலளித்ததாகத் தெரிகிறது. இச்செயலி, அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து 400 மீட்டர் சுற்றளவிற்குள் நடக்கும் மாரடைப்பு, தீ விபத்துகளை அவர்களுக்குத் தெரிவிக்கும். மேலும், அருகில் உள்ள இதயத்துடிப்பைச் சீர்செய்யும் தானியங்கிக் கருவிகளின் (automated external defibrillators) இருப்பிடத்தையும் காட்டும்.
பொதுமக்களின் ஈடுபாடு ஊக்கமளிப்பதாகக் கூறிய குடிமைத் தற்காப்புப் படை, மேலும் பலரும் இதில் பதிவு செய்துகொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொண்டது.
பாதுகாப்புச் சோதனைகள்
கடந்த ஆண்டில் குடிமைத் தற்காப்புப் படை 14,750 தீப்பாதுகாப்பு அமலாக்கச் சோதனைகளை நடத்தியது. மொத்தம் 2,668 தீச்சம்பவக் குறைப்பு அறிவிப்புகள் (FHAN) வழங்கப்பட்டதாகவும், தீயணைப்புக் கருவிகள் முறையாகப் பராமரிக்கப்படாததே இதற்குப் பொதுவான காரணமாக இருந்ததாகவும் அது சொன்னது.
மேலும், குற்றச்செயலுக்கான 1,209 அறிக்கைகள் (NOO) வழங்கப்பட்டதாக அறிக்கை சொன்னது. உரிய அங்கீகாரம் இன்றி தீப்பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டதே இதற்குப் பொதுவான காரணமாகக் கூறப்பட்டது.

