சிங்கப்பூரில் சிங்கிலிஷை தேசிய அடையாளத்தின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்வதில் இந்தியச் சமூகம் மற்றவர்களைவிட அதிகத் தயக்கம் காட்டுவது ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
சிங்கிலிஷைச் சமூகத்திலும் வேலையிடத்திலும் பயன்படுத்துவதில் அவர்களின் நாட்டம் குறைவாக உள்ளது என்று ஆய்வு குறிப்பிட்டது.
ஆயினும், இந்தியச் சமூகம் அதிகாரபூர்வமற்ற பாரம்பரிய மொழிகளைப் பாதுகாப்பதில் காட்டும் அர்ப்பணிப்பு அதிகம் இருப்பதாகவும் அது சுட்டியது.
கொள்கை ஆய்வுக் கழகம் திங்கட்கிழமை (மே 25) வெளியிட்ட அறிக்கையின்படி, சிங்கிலிஷ் பேசத் தெரிந்தோரின் விகிதம் கூடியுள்ளது. 2018ல் 55.7 விழுக்காடாக இருந்த அவ்விகிதம், 2024ல் 57.8 விழுக்காட்டுக்கு உயர்ந்தது.
இருப்பினும், அதனுடன் கொண்டுள்ள பிணைப்பு அதிகமில்லை என்று இந்தியர்கள் கருதுகின்றனர். சிங்கிலிஷ், தங்களின் அடையாளத்துக்குப் பங்களிப்பதாக 49.8 விழுக்காட்டினர் மட்டுமே கூறினர். அது சீனர்களையும் (58.7 விழுக்காடு) மலாய்க்காரர்களையும் (56.9 விழுக்காடு) விடக் குறைவு.
சமூக அளவில் நண்பர்களுடன் சிங்கிலிஷ் பேசுவது ஆகக் குறைவு (49.5 விழுக்காடு) என்று இந்தியச் சமூகத்தினர் தெரிவித்தனர். சிங்கிலிஷைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய கலாசாரமாக 42.8 விழுக்காட்டினர் மட்டுமே கருதுகின்றனர். அது மலாய் இனத்தவரைவிடச் (42.2 விழுக்காடு) சற்று அதிகம் என்றாலும் சீன இனத்தவரைவிட (52.8 விழுக்காடு) கணிசமான அளவுக்குக் குறைவு.
வேலையிடங்களில் சிங்கிலிஷைப் பயன்படுத்துவது சரியாக இருக்காது என இந்திய அலுவலக ஊழியர்கள் கருதுவதாக ஆய்வு குறிப்பிட்டது.
அலுவலக மின்னஞ்சல்களில் சிங்கிலிஷ் பயன்படுத்துவது ஒருபோதும் முறையாக இருக்காது அல்லது எப்போதாவது பொருத்தமாக இருக்கும் என்று 65.4 விழுக்காட்டினர் கருதுகின்றனர். மற்ற இனத்தவரிடையே அந்த விகிதம் குறைவாக இருந்தது. மேலதிகாரியுடன் சிங்கிலிஷில் பேசுவது பொருத்தமற்றது என்று நினைப்போரிலும் இந்தியர்களே (44.8 விழுக்காடு) அதிகம். சீனர்களிடையே அது 32.6 விழுக்காடாகவும் மலாய்க்காரர்களிடம் 35.2 விழுக்காடாகவும் இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
பாரம்பரிய மொழிகளைக் காப்பதில் இந்தியச் சமூகம் முன்னிலை வகிக்கிறது.
கருத்தாய்வில் பங்கேற்ற இந்தியர்களில் 77.9 விழுக்காட்டினர், பாரம்பரிய மொழியை நன்றாகப் பேசுவதாய்க் கூறினர். அது சீனர்களையும் (60.7 விழுக்காடு) மலாய்க்காரர்களையும் (26.2 விழுக்காடு) காட்டிலும் அதிகம்.
மேலும், ஐவரில் மூவர் (62.2 விழுக்காட்டினர்) நண்பர்களுடன் பாரம்பரிய மொழிகளை அடிக்கடி பயன்படுத்துகின்றனர். அதிகாரபூர்வத் தமிழ்மொழிக்கு அப்பாற்பட்டு மொழிப் பன்முகத்தன்மையைப் பேணிக்காப்பதில் அவர்கள் கொண்டுள்ள ஆழமான பற்றுதலை அது காட்டுகிறது.

