சாங்கி விமான நிலையத்தில் பயணப்பெட்டி கையாளும் வேலை: உள்ளூர்வாசிகள் ஆர்வம்

சாங்கி விமான நிலையத்தில் பயணப்பெட்டி கையாளும் வேலை: உள்ளூர்வாசிகள் ஆர்வம்

தொடரும் ஆட்சேர்ப்பு சவால்
கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

06 Nov 2026 - 6:47 pm

2 mins read

சாங்கி விமான நிலையத்தில் பயணப்பெட்டிகளைக் கையாள்வது உள்ளிட்ட வேலைகளில் சேர உள்ளூர்வாசிகள் ஆர்வம் காட்டினாலும் ஆட்சேர்ப்புப் பணி பெருஞ்சவாலாகவே நீடிக்கிறது.

கடுமையான உடலுழைப்பு, சுழற்சிமுறைப் பணி, நீண்ட பயணத் தொலைவு முதலியவற்றால் வேலை தொடங்குவதற்கு முன்னரே பலர் பின்வாங்கிவிடுகின்றனர்.

வேலைவாய்ப்புத் தளமான ‘ஃபாஸ்ட்ஜாப்ஸின்’ தகவல்படி, அதன் தளம் வாயிலாகப் பயணப்பெட்டிகளைக் கையாளும் வேலைகளுக்குக் கிட்டத்தட்ட 600 பேர் விண்ணப்பித்துள்ளனர்; அவர்களில் பத்தில் ஆறு பேர் சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகள்.

ஆனால் பல விமான நிலையப் பணிகள் பெரும்பாலும் 24 மணிநேரச் சுழற்சி முறை வேலை, அதிக உடல் உழைப்பைக் கோரும் பணி, வேலையைத் தொடங்கு முன்னர் பெறவேண்டிய பாதுகாப்பு அனுமதி, சாங்கிக்கு நீண்ட தொலைவுப் பயணம் முதலியவற்றை உள்ளடக்கியவை.

“விண்ணப்பிப்பதற்கும் வேலையின் முதல் நாளுக்கும் இடையே விண்ணப்பதாரர்கள் விலகுவதற்கு இவை வழிவகுக்கும்,“ என்று ஃபாஸ்ட்ஜாப்ஸின் நிறுவனரும் தலைமை நிர்வாகியுமான திரு ஜூலியன் டான் கூறினார்.

இதனிடையே, சாட்ஸ் நிறுவனத்தின் ஒப்பந்த நிறுவனங்கள் வேலை நியமன அனுமதி அட்டைகளைத் தவறாகப் பயன்படுத்தியதாக எழுந்த சந்தேகத்தை அடுத்து, மனிதவள அமைச்சு 45 நிறுவனங்கள்மீது விசாரணை நடத்தி வருகிறது.

மேலாண்மைப் பணிகளுக்கான அனுமதி அட்டையைப் பெற்று, குறைந்த ஊதியப் பணிகளுக்கு ஆள்களை அமர்த்தியதாக 270 ஊழியர்கள் தொடர்பில் சந்தேகிக்கப்படுகிறது. விமான நிலையச் சேவைகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகச் செயல்பாடுகளில் சில மாற்றங்களைச் செய்வதாகச் சாட்ஸ் நிர்வாகம் தெரிவித்தது. ஊழியர்கள் வேறு பணிகளைச் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுவதாக அது குறிப்பிட்டது.

சேவைத் துறைக்கான வெளிநாட்டு ஊழியர் ஒதுக்கீட்டுக் கட்டுப்பாடுகளைத் தவிர்க்கவே முதலாளிகள் இவ்வாறு செய்வதாக ‘டிடபிள்யுசி2’, ‘ஹோம்’ ஆகிய வெளிநாட்டு ஊழியர்நல அமைப்புகள் தெரிவித்தன.

சேவைத் துறையில் வேலை அனுமதி அட்டை, ‘எஸ் பாஸ்’ வைத்திருப்போர் ஒரு நிறுவனத்தின் ஊழியரணியில் 35 விழுக்காட்டுக்கும் மேல் இருக்கக் கூடாது. அதேவேளையில், மேல்நிலை வேலை அனுமதி அட்டைதாரர்களுக்கு வெளிநாட்டு ஊழியர் ஒதுக்கீடோ தீர்வையோ கிடையாது.

இந்தியா, பங்ளாதேஷ், மியன்மார் போன்ற நாடுகளிலிருந்து குறிப்பிட்ட சில வேலைகளுக்கு மட்டுமே ஊழியர்களை அமர்த்த முடியும். பயணப்பெட்டி கையாளும் பணி அவற்றில் இடம்பெறவில்லை.

இந்தியாவிலிருந்து தளவாட மேலாளர் பதவிக்கு மாதம் $8,000 சம்பளம் என விண்ணப்பிக்கப்பட்டு, சிங்கப்பூருக்கு வந்ததும் வெறும் $1,500 சம்பளத்தில் பயணப்பெட்டிகளைக் கையாளும் பணியில் அமர்த்தப்பட்ட சம்பவங்களை அமைப்புகள் சுட்டிக்காட்டின.

இடைத்தரகர்களுக்கு $10,000 வரை கட்டணம் செலுத்திப் பலர் வேலை மோசடிகளுக்கு ஆளாகியுள்ளனர். நாடு கடத்தப்படுவோம் அல்லது அமைச்சை ஏமாற்றியதாகக் குற்றம் சுமத்தப்படுவோம் என்ற அச்சத்தால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கத் தயங்குவதாகக் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்