வரவிருக்கும் அமைச்சரவை மறுசீரமைப்பில், மூன்றாம் தலைமுறை அமைச்சர்கள் முன்னர் கைப்பற்றிய மிகப் பெரிய அமைச்சுகளில், நான்காம் தலைமுறை அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அரசாங்கத்தில் புதிய துடிப்பைக் கொண்டு வரும் எனக் கருதப்படுகிறது..
துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், புகழ்பெற்ற மூன்றாம் தலைமுறை அமைச்சர்களான மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன், தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் உட்பட முக்கியத் தலைவர்கள் பலர் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டனர்.
இதற்கிடையே, அமைச்சரவையில் இடம்பெறுவார்கள் என்று கருதப்பட்ட புதிய முகங்களில் பொதுச் சேவை முன்னாள் உயரதிகாரிகள் பலர் அடங்குவர். மேலும் அவர்களில் பலர் துணை அமைச்சர் பதவிகளை ஏற்க வாய்ப்புள்ளது என்றும் அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
பிரதமர் லாரன்ஸ் வோங் விரைவில் புதிய அமைச்சரவையை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு முந்தைய பிரதமர்கள் வழக்கமாகத் தேர்தலுக்கு இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குப் பிறகு இதைச் செய்து வந்தார்கள்.
2020ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமர் லீ சியன் லூங் தமது புதிய அமைச்சரவையை ஜூலை 10ஆம் தேதி வாக்களிப்பு நாளுக்குச் சுமார் இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஜூலை 25ஆம் தேதி அறிவித்தார். அமைச்சரவை உறுப்பினர்கள் ஜூலை 27ஆம் தேதி பதவியேற்றனர்.
2015ல் வாக்களிப்பு நாளான செப்டம்பர் 11க்குப் பிறகு, செப்டம்பர் 28ஆம் தேதி அவர் அமைச்சரவையை அறிவித்தார். பதவியேற்பு விழா அக்டோபர் 1ஆம் தேதி நடைபெற்றது.
முந்தைய அமைச்சரவை மாற்றங்களில் அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், நாடாளுமன்றச் செயலாளர்களிடையே பதவி உயர்வுகள், அமைச்சு மாற்றம் மற்றும் ஓய்வு ஆகியவற்றைப் பிரதமர்கள் அறிவித்துள்ளனர்.
அமைச்சர் டாக்டர் இங், மூத்த துணை அமைச்சர் ஹெங் சீ ஹாவ் ஆகியோர் ஓய்வு பெறுவதால், தற்காப்பு அமைச்சில் அமைச்சரவைப் பதவி வகிக்கப் புதியவர்கள் தேவைப்படுவார்கள்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த மே மாதம் வரை பொருளியல் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராகவும் பணியாற்றிய துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டுக்குப் பதிலாக மற்றொருவர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.
தேர்தலின்போது பிரதமர் வோங், மக்கள் செயல் கட்சியின் இதர மூத்த தலைவர்களால் அரசியல் பதவிக்குப் புதிய முகங்கள் பலர் அடையாளம் காணப்பட்டனர்.
இதில் திரு ஜெஃப்ரி சியோவ், திரு டேவிட் நியோ, திருவாட்டி ஜாஸ்மின் லாவ், திரு தினேஷ் வாசு தாஸ், திரு கோ பெய் மிங், திருவாட்டி கோ ஹன் யான் போன்ற பொதுத்துறைத் தலைவர்கள் அடங்குவர்.
தனியார் துறையிலிருந்து மருத்துவர்கள் ஹமீது ரசாக், சையது ஹருன் அல்ஹப்ஷி ஆகியோரும் அவர்களில் அடங்குவர்.
எது எப்படி இருப்பினும், அதிகரித்துவரும் சவாலான சூழலைச் சமாளிக்க அரசாங்கத்தைத் தயார்ப்படுத்துவதற்காகவும் பிரதமர் வோங் தமது அமைச்சரவைக்குப் பொருத்தமானவர்களைத் தேர்வு செய்வார் என்று அரசியல் கவனிப்பாளர்கள் தெரிவித்தனர்.