கிராஞ்சியிலுள்ள மறுசுழற்சி நிலையம் ஒன்றில் பெரிய அளவில் தீ விபத்து நேர்ந்தது.
இதனால் ஒருவருக்கு தீக்காயங்களும் மூச்சுத் திணறல் பிரச்சினையும் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
புதன்கிழமை (பிப்ரவரி 19) காலை 10.30 மணிவாக்கில் 11 கிராஞ்சி கிரசென்டில் தீ ஏற்பட்டது.
கிட்டத்தட்ட 6 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தகவல் வெளியிட்டது.
இந்நிலையில், தீச்சம்பவம் ஏற்பட்ட கட்டடம் நிலையற்று இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் சில இடங்களில் சிறுசிறு பொருள்களில் தீ அணையாமல் இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். இதனால், தீயணைப்புப் பணிகள் சிறிது நேரம் நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
தீயை அணைக்க ஆறு நீர்ப்பீய்ச்சுக் குழல்கள், நான்கு ஆளில்லா தீயணைப்பு இயந்திரங்கள், ஆளில்லா வானூர்தி மூலம் தீயணைக்கும் கருவி உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டன.
ஆளில்லா இயந்திரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் தீயை அணைக்கும் அதிகாரிகளுக்கு ஆபத்து குறையும் என்று குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
தீச்சம்பவம் ஏற்பட்ட இடத்திற்கு அருகில் வசிப்பவர்களுக்கு எஸ்ஜிசெக்யூர் செயலி மூலம் எச்சரிக்கை தகவல் அனுப்பப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
சம்பவம் குறித்து விசாரணை தொடர்கிறது.