கோலா லங்காட்: மலேசியாவில் கோலா லங்காட் பகுதியில் உள்ள சட்டவிரோத மின் கழிவு ஆலை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையில் துப்பாக்கித் தோட்டாக்களை மறுசுழற்சி செய்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
“அந்த ஆலை இரண்டாண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அங்கு உண்மையான துப்பாக்கித் தோட்டாக்களுடன், பயன்படுத்தப்பட்ட தோட்டக்களையும் அவற்றின் வார்ப்புகளையும் கண்டோம்,” என்று உள்நாட்டு பாதுகாப்பு, பொது ஒழுங்குத் துறை துணைத் தலைவர் முகம்மது சுஸ்ரின் கூறினார்.
தெலுக் பங்கிலிமா காராங் ஆலையில் ஏறத்தாழ 50 டன் எடையுள்ள பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்த அவர், அந்தப் பொருள்கள் எங்கிருந்து வந்தன என்பதைக் கண்டுபிடிப்பதில் விசாரணை நடைபெற்று வருவதாக விளக்கினார்.
“அவை மலேசியாவிற்கு அப்பாலிருந்து வந்தவை என நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் கூறினார்.
“அங்கு பல நிலைகளில் தோட்டாக்களை மறுவடிவமைக்கும் பணி நடைபெற்றிருந்தது. அவற்றில் சில உலோகக் கம்பிகள் வடிவமைக்கப்பட்டு ஏற்றுமதிக்கு தயாராக இருந்தன,” என்று திரு முகம்மது சுஸ்ரின் தெரிவித்தார்.
அதிரடிச் சோதனையில் கிட்டத்தட்ட 70லிருந்து 80 ஊழியர்கள் வரை தடுத்து வைக்கப்பட்டனர்.