பெட்ரா பிராங்கா தீவுக்கு அருகே சிங்கப்பூருக்குச் சொந்தமான நீர்ப்பகுதியில் மலேசியாவில் பதிவுசெய்யப்பட்ட கப்பல் ஒன்று மூழ்கியது; அதிலிருந்த ஊழியர்கள் அனைவரும் மீட்கப்பட்டதாக சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 12) தெரிவித்தது.
பிற்பகல் 3.40 மணியளவில் ‘சில்வர் சின்சியர்’ (Silver Sincere) என்ற அந்த மலேசியக் கப்பலிலிருந்து நெருக்கடிநிலை அழைப்பு வந்ததை சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் அறிந்தது. கப்பலுக்குள் நீர் புகுந்துகொண்டிருந்ததாகத் தெரிவித்த அதன் தலைவர் அதிலிருந்த ஊழியர்கள் அனைவரையும் வெளியேற்றினார் என்றும் ஆணையம் குறிப்பிட்டது.
‘சில்வர் சின்சியர்’ கப்பல் 1987ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
அக்கப்பலில் இருந்த மீட்புப் படகுகளின் மூலம் அதன் ஊழியர்கள் மீட்கப்பட்டனர். சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையத்தின் உத்தரவில் இந்தோனீசியாவில் பதிவுசெய்யப்பட்ட ‘இந்தான் தாயா 368’ (Intan Daya 368) கப்பல், ‘சில்வர் சின்சியர்’ ஊழியர்களை மீட்டது.
மீட்கப்பட்ட ஊழியர்கள் அனைவரும் சீரான உடல்நிலையில் இருப்பதாகவும் அவர்கள் இந்தோனீசியாவின் பாத்து அம்பாரில் இறக்கிவிடப்படுவர் என்றும் சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் தெரிவித்தது.
மீட்புப் பணிகளில் சிங்கப்பூர் கடற்படை, சிங்கப்பூர் கரையோரக் காவல்படை ஆகியவற்றின் படகுகளுடன் ஆணையமும் தனது படகுகைளை ஈடுபடுத்தியது. தேடல், மீட்பு நடவடிக்கைகளை நிறைவடைந்துவிட்டதாக ஆணையம் சொன்னது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆணையம், எண்ணெய்க் கசிவைக் கையாளக் களமிறக்கப்படும் படகுகளையும் செயல்படுத்தியது.
சம்பவம் நிகழ்ந்த பகுதியைத் தவிர்க்குமாறு ஆணையம் அவ்வழியே செல்லும் கப்பல்களுக்கு அறிவுறுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இச்சம்பவத்துக்கு முதல் நாள், வியட்னாமில் பதிவு செய்யப்பட்ட கப்பல் ஒன்றிடமிருந்து நெருக்கடிநிலை அழைப்பு வந்தது. அதிலிருந்தோரை மீட்கும் நடவடிக்கையை ஆணையம் வழிநடத்தியது.
அக்கப்பலிலிருந்த 18 ஊழியர்களும் மீட்கப்பட்டனர்.

