கம்போடியாவை மையமாகக் கொண்டு சிங்கப்பூரர்களை குறிவைத்து அரசாங்க அதிகாரிகளைப்போல ஆள்மாறாட்டம் செய்யும் மோசடிக் கும்பலுடன் தொடர்புடைய மலேசிய ஆடவர் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 28) கைது செய்யப்பட்டுள்ளார்.
இயுஜீன் கோ என்ற 24 வயது ஆடவர் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் சிங்கப்பூரில் நுழைய முயன்றபோது கைதானார் என்று திங்கட்கிழமை காவல்துறை அறிக்கை வெளியிட்டது.
அரசாங்க அதிகாரிகள் போல ஆள்மாறாட்டம் செய்த 440 வழக்குகளில் அந்த மோசடிக் கும்பலுக்கு தொடர்பு உள்ளது என சந்தேகிக்கப்படுகிறது. அந்த மோசடிகளில் $41 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் 30 சந்தேக நபர்களின் புகைப்படங்களையும் விவரங்களையும் காவல்துறை வெளியிட்டுள்ளது.
அவர்களைப் பற்றி அறிந்தோர் காவல்துறைக்கு தகவல் அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அனைத்து விவரங்களும் ரகசியமாக வைத்துக்கொள்ளப்படும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் இயுஜீன் கோவுக்கு ஐந்து ஆண்டு சிறை, $100,000 அபராதம் அல்லது இரண்டு தண்டனைகளும் விதிக்கப்படலாம்.
கம்போடியத் தலைநகர் நோம்பென்னிலிருந்து செயல்பட்ட அந்த குற்றக்கும்பலுக்கு எதிராக சிங்கப்பூர் காவல்துறையும் கம்போடிய காவல்துறையும் இணைந்து கடந்த செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி முதல் நடவடிக்கையில் ஈடுபட்டன.
அந்த கும்பலின் சொத்துகளை ஆரம்பத்தில் பறிமுதல் செய்தபோது சிங்கப்பூர் காவல்துறை கோவின் அடையாளத்தைக் கண்டுபிடித்தது.
தொடர்புடைய செய்திகள்
கோ மீது டிசம்பர் 30ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும். கடந்த அக்டோபர் மாதம் காவல்துறை 27 சிங்கப்பூரர்களுக்கும் ஏழு மலேசியர்களுக்கும் கைதாணை வெளியிட்டபோது இயுஜீன் கோ அதில் இடம்பெறவில்லை.
சிங்கப்பூரரான இங் வெய் லியாங் என்பவரின் தலைமையில் கும்பல் செயல்பட்டுள்ளது. சகோதரரையும் உறவினரையும் காதலியையும் கும்பலில் இணைத்துக்கொண்ட அவர் தற்போது தலைமறைவாகிவிட்டார்.
இதுவரை இரு சிங்கப்பூரர்கள் கம்போடியாவிலிருந்தும் தாய்லாந்திலிருந்தும் சிங்கப்பூருக்கு நாடுகடத்தப்பட்டு நவம்பர் 17ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.
ஒரு மலேசியர் கம்போடியாவில் கைதாகி மலேசியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டு,பிறகு சிங்கப்பூரில் கடந்த நவம்பர் 18ஆம் தேதி குற்றஞ்சாட்டப்பட்டார்.
தலைமறைவாக உள்ள 30 நபர்களில் 24 சிங்கப்பூரர்களும் ஆறு மலேசியர்களும் அடங்குவர்.

