மோசடியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் மலேசியர்மீது குற்றச்சாட்டு

மோசடியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் மலேசியர்மீது குற்றச்சாட்டு

2 mins read
9676d51f-45cf-4fbb-b44a-555d33437f49
குற்றவியல் நடத்தையிலிருந்து பலன்களைப் பெற, மற்றொரு நபருக்கு உதவிசெய்ததாக அந்த ஆடவர்மீது குற்றம் சுமத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

அரசாங்க அதிகாரி ஆள்மாறாட்ட மோசடியில் சம்பந்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் மலேசிய ஆடவர்மீது வெள்ளிக்கிழமை (மார்ச் 6) குற்றஞ்சாட்டப்படும் என்று காவல்துறை தெரிவித்தது.

கடந்த 2025ஆம் ஆண்டிலிருந்து ரொக்கமும் நகைகளும் பெற, மோசடிக் கும்பல்களுக்கு உதவியதற்காகக் கைதுசெய்யப்பட்ட 50க்கும் மேற்பட்ட மலேசியர்களில் 44 வயதான அந்த ஆடவரும் ஒருவர்.

வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், காவல்துறை அந்தத் தகவல்களைத் தெரிவித்தது.

இவ்வாண்டு ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டதாகவும் காவல்துறை கூறியது.

‘ஹார்வி நோர்மன்’ கடையிலிருந்து அழைப்பதாகக் கூறிய ஒருவர் தம்மைத் தொடர்புகொண்டதாகப் பாதிக்கப்பட்டவர் காவல்துறையிடம் கடந்த புதன்கிழமை புகார் அளித்திருந்தார். $10,000க்கும் மேற்பட்ட விலையிலான மின்சாதனம் வாங்கப்பட்டதன் தொடர்பில் அந்த ஆடவர் அழைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அத்தகைய பொருளை வாங்கவில்லை என்று பாதிக்கப்பட்டவர் கூறியபோது, அனுமதியில்லாத பரிவர்த்தனைகள் ஏதேனும் செய்யப்பட்டனவா என்று வங்கிக் கணக்கைச் சரிபார்க்கும்படி அந்த ஆடவர் அவரிடம் கேட்டுக்கொண்டார். அதோடு, சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் தொடர்பு எண்ணையும் அவர் கொடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, ஆணையத்தின் அதிகாரி என்று கூறி மற்றொரு நபர் பாதிக்கப்பட்டவருக்கு அழைத்து, அவர் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதாகச் சொன்னார்.

விசாரணைக்காக, நகைகளை அதிகாரியிடம் ஒப்படைக்கும்படி அவர் பாதிக்கப்பட்டவரிடம் கூறினார்.

அந்தப் பாதிக்கப்பட்டவர் $28,000க்கு மேல் மதிப்புள்ள நகைகளை தெலுக் பிளாங்கா ரைசில் உள்ள அந்த மலேசிய ஆடவரிடம் ஒப்படைத்தார்.

தொடர் விசாரணைகளுக்குப் பிறகு, காவல்துறையினர் அந்த ஆடவரை பீஷானில் கைதுசெய்தனர்.

பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து நகைகளையோ ரொக்கத்தையோ பெற்று அடையாளம் தெரியாத மற்ற நபர்களிடம் அவற்றை ஒப்படைப்பதே அந்த மலேசியரின் வேலை என்று முதற்கட்ட விசாரணைகள் காட்டின.

நாடுகடந்த மோசடிக் கும்பல் உறுப்பினர்கள் என்று நம்பப்படும் அடையாளம் தெரியாத நபர்கள் அவருக்கு அந்த வேலையைக் கொடுத்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்த ஆடவருக்கு பத்தாண்டுகள்வரை சிறைத் தண்டனை, $500,000 வரை அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்