சிங்கப்பூர் நாணய ஆணைய அதிகாரியைப் போல ஆள்மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஆடவர்மீது சனிக்கிழமை (மே 23) குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மலேசியாவைச் சேர்ந்த அந்த 26 வயது ஆடவருடன் சேர்த்து மோசடிக் கும்பல்களுக்காகப் பணத்தையும் விலையுயர்ந்த பொருள்களையும் பெற்றதற்காகச் சிங்கப்பூரில் பிடிபட்ட மலேசியர்களின் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது.
மோசடிக்கு எதிரான தளபத்தியத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையை அடுத்து சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டார்.
இம்மாதம் 19ஆம் தேதி, 61 வயது பெண்ணுக்கு அறிமுகம் இல்லாத நபரிடமிருந்து தொலைபேசி அழைப்புவந்தது. அந்த ஆடவர் யூடிரிப் நிறுவனத்திலிருந்து பேசுவதாகக் கூறி, பெண்ணின் கணக்குப் பணமோசடியில் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.
அது தொடர்பில் சிங்கப்பூர் நாணய ஆணைய அதிகாரி கூடுதல் விவரங்களைப் பெறுவார் என்று பெண்ணிடம் கூறப்பட்டது.
சிங்கப்பூர் நாணய ஆணைய அதிகாரியைப் போல பேசிய ஆடவர், பாசிர் ரிஸ் வட்டாரத்தில் மே 14ஆம் தேதி, $45,000 தொகையைப் பெண் ஒப்படைக்கவேண்டும் என்று கூறினார்.
போலியான யூடிரிப் கணக்கு ஆவணத்தையும் நீதிமன்ற ஆணையையும் கொண்டு ஆள்மாறாட்டம் செய்த ஆடவர் பெண்ணை மிரட்டினார்.
இந்நிலையில், சந்தேக ஆடவரிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைமூலம் மோசடியால் பாதிக்கப்பட்டோரிடமிருந்து பணத்தையும் விலையுயர்ந்த பொருள்களையும் வாங்கும்படி சந்தேக நபரிடம் அறிமுகம் இல்லாத ஆடவர் ஒருவர் கூறியிருந்தது தெரியவந்தது.
தொடர்புடைய செய்திகள்
அந்த அறிமுகம் இல்லாத ஆடவர் எல்லைத் தாண்டிய குற்றக் கும்பலைச் சேர்ந்தவர் என்று நம்பப்படுகிறது.
அவர்மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதிகபட்சம் 10 ஆண்டு சிறைத் தண்டனை, $500,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
ஆள்மாறாட்ட மோசடிகள் குறித்து மிகவும் கவனமாக இருக்கும்படி காவல்துறை அதிகாரிகள் மீண்டும் நினைவூட்டினர்.

