சிங்கப்பூரில் செயல்பட்டுவரும் அனைத்து கோல்ட் ஸ்டோரேஜ் (Cold Storage), ஜயன்ட் (Giant) பேரங்காடிக் கிளைகளும் மலேசியச் சில்லறை வர்த்தகக் குழுமமான மேக்ரோவேல்யூ (Macrovalue) நிறுவனத்திடம் 125 மில்லியன் வெள்ளிக்கு விற்கப்படவிருக்கின்றன.
பேரங்காடிகளின் தற்போதைய உரிமையாளரான டிஎஃப்ஐ குழுமமும் மேக்ரோவேல்யூ குழுமமும் செய்துகொண்ட உடன்பாட்டின் கீழ் தீவெங்கும் உள்ள 48 கோல்ட் ஸ்டாரேஜ் கிளைகளையும் 41 ஜயன்ட் கிளைகளையும் உள்ளடக்கும்.
இருதரப்புக்கும் இடையிலான பரிவர்த்தனை இவ்வாண்டு பிற்பாதியில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதையடுத்து மேக்ரோவேல்யூ குழுமம் ஒட்டுமொத்த வர்த்தகத்தையும் கைப்பற்றும்.
டிஎஃப்ஐ குழுமம் சிங்கப்பூரிலும் வட்டாரத்திலும் உள்ள கார்டியன் மருந்துக் கடை, 7-லெவன் கடை ஆகியவற்றில் கவனம் செலுத்தவிருக்கிறது.
சிங்கப்பூரைத் தவிர்த்து தாய்லாந்து, ஹாங்காங், பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளிலும் டிஎஃப்ஐ குழுமம் கால் பதித்துள்ளது.
மேக்ரோவேல்யூ மலேசியாவில் உள்ள கோல்ட் ஸ்டோரேஜ், ஜயன்ட் கடைகளை ஏற்கெனவே நடத்திவருகிறது.
இதற்குமுன் அவற்றை ஜிசிஎச் (GCH) குழுமம் நிர்வகித்தது. 2023ஆம் ஆண்டு மேக்ரோவேல்யூ குழுமம் அனைத்து கிளைகளையும் வாங்கியது.
சிங்கப்பூர் கிளைகளையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதன் மூலம் இன்னும் திறம்பட செயல்பாடுகளை மேம்படுத்த முடியும் என்று மேக்ரோவேல்யூ குழுமத்தின் உரிமையாளர்களில் ஒருவர் அண்ட்ரூ லிம் கூறினார்.
வாடிக்கையாளர்களுக்கான சேவைத் தரத்தைத் தொடர்ந்து மேம்படுத்த உள்ளூர் நிர்வாகத்துடனும் செயல்பாட்டுக் குழுக்களுடனும் இணைந்து வேலை செய்யப்போவதாக திரு லிம் சொன்னார்.
டிஎஃப்ஐ குழுமத்தின்கீழ் இயங்கிய பேரங்காடிகள் பல ஆண்டுகள் எதிர்கொண்ட நட்டத்துக்குப் பின் கடந்த ஆண்டு லாபம் ஈட்டத் தொடங்கியது.
கடந்த ஆண்டு மொத்தம் 11 ஜயன்ட் கிளைகள் மூடப்பட்டன. ஆக அண்மையில் லெஷர் பார்க் காலாங்கில் உள்ள கோல்ட் ஸ்டோரேஜ் கிளை இம்மாதம் 10ஆம் தேதி மூடப்பட்டது.
வாடிக்கையாளர்களைக் கூடுதலாக ஈர்க்கஜூரோங் ஈஸ்ட் ஐஎம்எம், சீமெய் பெருவிரைவு ரயில் நிலையம் ஆகியவற்றில் உள்ள ஜயன்ட் கிளைகள், தெம்பனிஸ் 1இல் உள்ள கோல்ட் ஸ்டோரேஜ் கிளை ஆகியவை மறுசீரமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டன.