$305,000 மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்; மலேசியர் கைது

1 mins read
7e4458ef-45ad-4aee-ac09-0ba9c751e573
ஐந்து கிலோவிற்கும் அதிகமான போதைப்பொருள்கள் சிக்கின. - படம்: மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு

மலேசிய ஆடவர் ஒருவர் ஓட்டிச் சென்ற காரிலிருந்து ஐந்து கிலோவிற்கும் அதிகமான போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, சந்தேகத்தின்பேரில் அந்த 34 வயது ஆடவர் கைதுசெய்யப்பட்டார்.

திங்கட்கிழமை (செப்டம்பர் 9) இரவு சின் சுவீ சாலைப் பகுதியில் அவர் கைதுசெய்யப்பட்டதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (சிஎன்பி) செவ்வாய்க்கிழமை ஓர் அறிக்கை மூலம் தெரிவித்தது.

அவரது காரிலிருந்து 264 கிராம் ‘ஐஸ்’, 1.88 கிலோ ஹெராயின், 3.14 கிலோ கஞ்சா ஆகிய போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக சிஎன்பி கூறியது.

“அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்கள், 1,500 போதைப் புழங்கிகளுக்கு ஒரு வாரத்திற்குப் போதுமானவை,” என்று சிஎன்பி தெரிவித்தது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்களின் மதிப்பு 305,000 வெள்ளி எனக் கூறப்பட்டது.

பதினைந்து கிராமிற்கும் அதிகமான தூய ஹெராயின் அல்லது 250 கிராம் ‘ஐஸ்’ அல்லது 500 கிராம் கஞ்சாவைக் கடத்திய குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால், குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.

கைதான சந்தேகப் பேர்வழியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சிஎன்பி தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்