மோசடிச் சம்பவங்களில் ஈடுபட சிங்கப்பூர் வரும் மலேசியர்கள்

மோசடிச் சம்பவங்களில் ஈடுபட சிங்கப்பூர் வரும் மலேசியர்கள்

2 mins read
3879f7e6-bf1f-4af7-8c32-c715f47543d6
மலேசியாவைச் சேர்ந்த 38 வயது லியூ வீ யான், மோசடிச் சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படும் கேலாங் வெஸ்ட் சமூக மன்றத்துக்கு அழைத்துசெல்லப்பட்டார். - படம்: த கவி
multi-img1 of 2

மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு மோசடிச் சம்பவங்களில் ஈடுபட வருவோரின் போக்கு அதிகரித்துள்ளதாகக் காவல்துறை கண்டறிந்துள்ளது.

மோசடிக் கும்பல்களின் சார்பில் பாதிக்கப்பட்டோரிடமிருந்து ரொக்கத்தையும் விலையுயர்ந்த பொருள்களையும் வாங்க முற்பட்ட 50க்கும் அதிகமான மலேசியர்கள் சிங்கப்பூரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து அத்தகையோர் கைதுசெய்யப்பட்டதாகக் காவல்துறை கூறியது. அதில் இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து இதுவரை ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டனர்.

வியாழக்கிழமை (மார்ச் 12) அரசாங்க ஊழியர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்த இரண்டு மலேசியர்கள் மோசடிச் சம்பவத்தை நிகழ்த்திய இடங்களுக்கு அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டனர்.

அவர்களில் ஒருவரான 44 வயது மலேசியர் கோ கெட் மிங், தெலுக் பிளாங்கா ரைஸ் புளோக் 42க்கு அழைத்துசெல்லப்பட்டார்.

மோசடியால் பாதிக்கப்பட்டவரிடமிருந்து $28,000 மதிப்புள்ள நகைகளைக் கோ பெற்றதாகக் கூறப்படுகிறது. முன்பின் தெரியாத நபரின் கட்டளையின்படி கோ நடந்துகொண்டது விசாரணையில் தெரியவந்தது.

இம்மாதம் 4ஆம் தேதி பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரை அடுத்து பீ‌‌‌ஷானில் அவரை அதிகாரிகள் கைதுசெய்தனர்.

இரண்டாவது சந்தேக நபரான 38 வயது மலேசியர் லியூ வீ யான், இம்மாதம் 6ஆம் தேதி உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் கைதானார்.

லீ, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் $130,000 மதிப்புள்ள நகைகளைக் கேலாங் வெஸ்ட் சமூக மன்றம் உள்ள கார் நிறுத்துமிடத்தில் உள்ள தமது காரில் வைக்கும்படி கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது. லீயும் வெளிநாட்டு மோசடிக் கும்பலுக்காக வேலை செய்ததாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு அதிகபட்சம் 10 ஆண்டு வரை சிறைத் தண்டனை, $500,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படக்கூடும்.

கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதியிலிருந்து மோசடியில் ஈடுபடுவோருக்கும் மோசடிக் கும்பலுக்கு உதவுவோருக்கும் ஆறு பிரம்படிகள் கட்டாயமாக விதிக்கப்படும் தண்டனை நடப்புக்கு வந்தது.

குறிப்புச் சொற்கள்
மோசடிமலேசியர்சிங்கப்பூர்