சிங்கப்பூரில் முதியவர்களிடையே, குறிப்பாக வயதானவர்களிடமும், மிகவும் பலவீனமானவர்களிடமும் ஊட்டச்சத்து குறைபாடு வளர்ந்து வரும் பிரச்சினையாக இருப்பதாக இங்குள்ள சுகாதார வழங்குநர்கள் கண்டறிந்துள்ளனர்.
சிங்கப்பூரின் பொதுச் சுகாதாரப் பராமரிப்பு அமைப்பை நிர்வகிக்கும் மூன்று குழுமங்களில் ஒன்றான தேசிய சுகாதாரப் பராமரிப்பு (என்எச்ஜி) ஹெல்த் குழுமத்தின் தரவுகளின்படி, 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மருத்துவமனை நோயாளிகளில், ஊட்டச்சத்து குறைபாட்டின் அபாய விகிதம் 2022ல், 10ல் மூன்றாக இருந்தது. 2024ல் அது 10ல் நான்காக உயர்ந்துள்ளது.
மருத்துவமனையில் இருந்து வெளியேறும்போது உணவியல் நிபுணர்களால் பார்க்கப்பட்ட நோயாளிகளில், ஊட்டச்சத்து குறைபாடு அல்லது ஊட்டச்சத்து குறைபாடு அபாயத்தின் விகிதம் அதே காலகட்டத்தில் 56 விழுக்காட்டிலிருந்து 66 விழுக்காடாக உயர்ந்துள்ளதாக என்எச்ஜி ஹெல்த் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரின் மக்கள்தொகை வேகமாக மூப்படைந்து வருவதால், இங்குள்ள முதியோரிடையே ஊட்டச்சத்து குறைபாடு கவலையளிக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். அதில் 2030ஆம் ஆண்டுக்குள் சுமார் 24 விழுக்காட்டு குடிமக்கள் 65 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களாக இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தேசிய பல்கலைக்கழக சுகாதாரக் குழுமம், 60 வயதுக்கு மேற்பட்ட 475 பெரியவர்களிடம் நடத்திய தனி ஆய்வில், ஆரோக்கியமான முதியவர்களில் 10 பேரில் ஒருவருக்கும், பலவீனத்தின் சில அறிகுறிகள் உள்ளவர்களில் ஆறில் ஒருவருக்கும் ஊட்டச்சத்து குறைபாடு விகிதம் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. பலவீனமான மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவர்களில் இந்த விகிதம் மிக அதிகமாக இருந்தது என்று தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் இணைப் பேராசிரியர் ரேஷ்மா மெர்ச்சண்ட் கூறினார்.
நாட்பட்ட ஊட்டச்சத்து குறைபாடு, பலவீன நிலை அதிகரிப்பதற்கும், கீழே விழுதல் மற்றும் எலும்பு முறிவுகள் ஏற்படும் அபாயம் அதிகரிப்பதற்கும் வழி வகுக்கிறது என்று தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் முதியோர் மருத்துவப் பிரிவின் தலைவரும் மூத்த மருத்துவ ஆலோசகருமான பேராசிரியர் ரேஷ்மா விவரித்தார்.
ஊட்டச்சத்து குறைபாட்டின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிந்து அடிப்படை ஆதரவை வழங்க 500க்கும் மேற்பட்ட சமூக பராமரிப்பு வழங்குநர்கள் இன்றுவரை பயிற்சி பெற்றுள்ளனர். மேலும் வீட்டு பராமரிப்புக் குழுக்கள் மற்றும் சமூக அமைப்புகளுடனான பங்காளித்துவம் மூலம் மக்களைச் சென்றடைவதை விரிவுபடுத்துவதற்கான திட்டங்களும் உள்ளன.

