ஈராண்டுகளுக்குமுன் செயின்ட் ஜோசஃப் தேவாலயத்தில் கத்தோலிக்கப் பாதிரியாரைக் கத்தியால் குத்திய ஆடவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
குற்றவாளியான 38 வயது பஸ்நாயக்க கீத் ஸ்பென்சருக்கு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 21) நான்காண்டுகள் மூன்று மாதங்கள் சிறைத்தண்டனையும் ஒன்பது பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
அச்சம்பவம் 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நிகழ்ந்தது. பஸ்நாயக்க, வேண்டுமென்றே அபாயகரமான ஆயுதத்தைக் கொண்டு தாக்குதல் நடத்தியது, ஆயுதம் வைத்திருந்தது உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார்.
பாதரியார் கிறிஸ்டஃபர் லீ தாக்கப்பட்டு கிட்டத்தட்ட ஈராண்டுகளுக்குப் பிறகு பஸ்நாயக்க கீத் ஸ்பென்சர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். தாக்கப்பட்டபோது ரெவரென்ட் கிறிஸ்டஃபர் லீக்கு வயது 57.
கூட்டுப் பிரார்த்தனையின்போது அச்சம்பவம் நிகழ்ந்தது.
பஸ்நாயக்க காணொளிவழி வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 21) நீதிமன்றத்தில் முன்னிலையானார். 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் தேதி மாலை வேளை நடந்த கூட்டுப் பிரார்த்தனையின்போது பஸ்நாயக்க, பாதிரியார் லீயைக் கத்தியால் குத்தியதாக அரசாங்கத் துணை வழக்கறிஞர் ஸு சிஜியா கூறினார்.
பஸ்நாயக்க அன்றைய நாள் மாலை 5.30 மணியளவில் தனியாக தேவாலயத்தைச் சென்றடைந்தார். கிட்டத்தட்ட 900 பேர் அன்றைய கூட்டுப் பிரார்த்தனையில் கலந்துகொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.


