சென்ற ஆண்டு நவம்பர் மாதம் செயின்ட் ஜோசஃப் தேவாலயத்தில் பாதிரியார் ஒருவர் கத்திக்குத்துக்கு ஆளானார்.
அச்சம்பவத்தில் சந்தேக நபரான ஆடவர் மீது திங்கட்கிழமை (மார்ச் 17) கூடுதல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
சம்பவம் நிகழ்ந்த நவம்பர் ஒன்பதாம் தேதியன்று ஆயுதம் வைத்திருந்ததாக சந்தேக நபரான 37 வயது பஸ்நாயக்க கீத் ஸ்பென்சர் எனும் ஆடவர் மீது திங்கட்கிழமை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
வேண்டுமென்றே கடுமையான காயம் விளைவிக்க கத்தியைப் பயன்படுத்தியதாக அவர் மீது ஏற்கெனவே ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. 14.5 சென்டிமீட்டர் நீளம்கொண்ட ‘பென்னைஃப்’ கத்தி, மடக்கும் கத்தி, மீன்களைப் பிடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் கொக்கி ஆகியவற்றை சந்தேக நபர் வழிபாட்டுத் தலத்துக்கு எடுத்துச் சென்றதாக நம்பப்படுகிறது.
சிங்கப்பூரரான பஸ்நாயக்கவுக்கு திங்கட்கிழமையன்று பிணை வழங்கப்படவில்லை. அவரின் வழக்குக்கு முந்தைய கலந்துரையாடல் (pre-trial conference) வரும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி நடக்கும்.
அப்பர் புக்கிட் தீமா ரோட்டில் உள்ள செயின்ட் ஜோசஃப் தேவாலயத்தில் நவம்பர் ஒன்பதாம் தேதி மாலை 6.30 மணிக்கு சற்று முன்பு, பஸ்நாயக்க, 57 வயது பாதிரியாரான கிறிஸ்டஃபர் லீயை நோக்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது. பாதிரியார் லீ கூட்டுப் பிரார்த்தனையை வழிநடத்திக்கொண்டிருந்தபோது பஸ்நாயக்க அவரைக் கத்தியால் குத்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து பாதிரியார் லீயின் மேல் உதட்டிலும் வாயின் ஓரத்திலும் ஆழமான வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன. கூட்டுப் பிரார்த்தனையில் பங்பேற்றோர் பஸ்நாயக்காவைக் கட்டுப்படுத்தியதாக நம்பப்படுகிறது.
அதன் பின்னர் பஸ்நாயக்கவைக் கைது செய்ய காவல்துறையினர் சம்பவ இடத்தை வந்தடைந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
பாதிரியார் லீ, சிகிச்சைக்குப் பிறகு நவம்பர் 15ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.