மின்சிகரெட் தொடர்பான குற்றங்களின் தொடர்பில் ஆடவர்கள் இருவர் மீது வியாழக்கிழமை (செப்டம்பர் 25) குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
அவர்களில் ஒருவர், விற்பனைக்காக 5,000 மின்சிகரெட்டுகளைப் பெற முயன்றதாக நம்பப்படுகிறது.
சந்தேக நபரான 32 வயது மெல்ன் வோங் முன் ஹாவ், கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி சுங்கை காடுட் ஸ்திரீட் 2ல் அக்குற்றத்தைப் புரிந்ததாகக் கூறப்படுகிறது. அவர் மீது ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
சிங்கப்பூரரான அவரின் வழக்கு குறித்த தகவல்கள் வரும் நவம்பர் மாதம் ஆறாம் தேதி நீதிமன்றத்தில் குறிப்பிடப்படும்.
மற்றொரு சந்தேக நபரான 31 வயது ஷான் ஃபுவா மிங் ஹுய் 45 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். 2023, 2024ஆம் ஆண்டுகளில் அவர் குற்றங்களைப் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
மேலும், 2023ஆம் ஆண்டு மே மாதம் நான்காம் தேதி ஃபுவா, வாட்ஸ்அப்வழி 22 ஒருமுறை பயன்படுத்தப்படும் மின்சிகரெட்டுகளை 333 வெள்ளிக்கு விற்க முயன்றதாக நம்பப்படுகிறது.
பிறகு சென்ற ஆண்டு ஜனவரி மாதம் 28ஆம் தேதியும் ஃபுவா, வாட்ஸ்அப்வழி 20 ஒருமுறை பயன்படுத்தப்படும் மின்சிகரெட்டுகளை 316 வெள்ளிக்கு விற்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.
அவரின் வழக்கு வரும் அக்டோபர் மாதம் 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

