காவல்துறை அதிகாரியைக் கடித்ததாகக் கூறப்படும் ஆடவர் கைது

1 mins read
f03a77ff-caf2-4225-b539-a0d9dfd3dd4e
போக்குவரத்துக் காவல்துறையினர் சோதனைக்காக நிறுத்தச் சொன்னபோது ஆடவர் தன் வாகனத்தை விரைவாக ஓட்டிச் சென்றதாகக் கூறப்பட்டது. - படம்: சிங்கப்பூர் காவல்துறை

தடுத்து வைக்க முயன்ற காவல்துறை அதிகாரியைக் கடித்ததாகக் கூறப்படும் ஆடவர் மீது ஜூலை 26ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்டது. அந்த 43 வயது ஆடவர், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியது, வாகனமோட்டும் உரிமமின்றி வாகனம் ஓட்டியது ஆகியவை தொடர்பான குற்றச்சாட்டுகளையும் எதிர்கொண்டார்.

ஜாவா ரோட்டில் ஜூலை 24ஆம் தேதி வேன் ஒன்றை ஓட்டிய அந்த ஆடவர், பிற்பகல் 1.40 மணியளவில் போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகள் சோதனைக்காக நிறுத்தக் கூறியபோது வாகனத்தை நிறுத்தவில்லை. மாறாக, வேனை விரைவாகவும் ஆபத்தான முறையிலும் அவர் ஓட்டிச் சென்றார். பின்னர் சிம்ஸ் வே, கேலாங் ரோடு சாலைச் சந்திப்பில் வேனை நிறுத்திவிட்டுத் தப்பியோடினார்.

காவல்துறை அதிகாரிகள் அவரைத் துரத்திச் சென்றனர். லோரோங் 9 கேலாங்கில் அவர் பிடிபட்டார். ஆடவரைக் கைது செய்ய முயன்ற காவல்துறை அதிகாரிகளில் ஒருவரின் வலது கையை அவர் கடித்ததாகக் கூறப்பட்டது.

காயமடைந்த 35 வயது அதிகாரி சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

கடமையைச் செய்த காவல்துறை அதிகாரியைக் கடித்து, காயப்படுத்தியதோடு அந்த ஆடவர் ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டி சாலையைப் பயன்படுத்திய மற்றவர்களின் பாதுகாப்புக்குப் பங்கம் விளைவித்ததாகப் போக்குவரத்துக் காவல்துறைத் தளபதி டேனியல் டான் கூறினார்.

ஆடவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்