மனநலப் பிரச்சினைக்கான சிகிச்சையை நிறுத்தியிருந்த 27 வயது ஆடவர் ஒருவர், தம்மைத் தாமே மாய்த்துக்கொள்வதற்கு முன்பு யாரையாவது கொன்றுவிடுமாறு தனக்குள் கேட்ட குரலுக்கு ஏற்ப செயல்பட்டு, காலாங் வேவ் கடைத்தொகுதியில் முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவரை நெஞ்சில் கத்தியால் குத்தினார்.
தன் காதலுடனும் மற்றொருவருடனும் கடைத்தொகுதியில் இருந்த அப்போது 29 வயதான பெண்ணைச் சிங்கப்பூரரான சுவா ஜிங் யுவான் குறிவைத்துக் தாக்கினார்.
தாக்குதலுக்குப் பிறகு சுவா அங்கிருந்து தப்பியோடினார். இருப்பினும், பாதிக்கப்பட்ட பெண்ணுடன் இருந்தவர்கள் அவரைத் துரத்திப் பிடித்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, "நான் அவளைக் கொன்றதே நீங்கள் என்னைச் சுட வேண்டும் என்பதற்காகத்தான்," என்று கூறிய சுவா, தன்னைச் சுடுமாறு அவர்களைத் தொடர்ந்து வற்புறுத்தினார்.
சுவா, காயத்தை ஏற்படுத்திய நோக்குடன் கொலை செய்ய முயன்ற குற்றத்தை திங்கட்கிழமை (நவம்பர் 2) நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். அவருக்கு ஐந்தரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மனநல அறிகுறிகளுடன் தீவிர மனச்சோர்வால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார் என்றும் அது அவரது முடிவெடுக்கும் ஆற்றலைக் கடுமையாகச் சிதைத்து அக்குற்றத்தைச் செய்ய முக்கியக் காரணமாக அமைந்தது என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அப்பெண்ணின் நெஞ்சுப் பகுதியில் கத்திக்குத்துக் காயமும் கழுத்தில் ஆழமான கீறலும் ஏற்பட்டன. அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, உடல்நிலை சீரானதால், அடுத்த நாளே அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.
