தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஸ்கூட் விமானத்தில் சக பயணியிடம் திருடிய ஆடவர்

2 mins read
c21bfaa8-031c-463a-ab8c-4a7edc60d31b
சீன நாட்டவரான ஜாங் குன், பாதிக்கப்பட்டவரின் பயணப்பெட்டியை இருக்கைக்கு மேலிருக்கும் பகுதியில் இருந்து எடுத்து உள்ளிருந்து பணமும் கடன்அட்டையையும் திருடி உள்ளார். - கோப்புப் படம்

மார்ச் 16ஆம் தேதி இரவு கோலாலம்பூரிலிருந்து சிங்கப்பூர் வந்த ஸ்கூட் விமானத்தில் பயணியின் பணத்தையும் கடன்பற்று அட்டையையும் திருடிய 51 வயது சீன நாட்டவரான ஜாங் குன், செவ்வாய்க்கிழமை (மே 6) ஒரு திருட்டுக் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். பின்னொரு நாளில் அவருக்குத் தீர்ப்பளிக்கப்படும்.

35 வயதான சிங்கப்பூரர், தனது வருங்கால மனைவியுடன் ஜாங்கிற்கு மூன்று வரிசைகள் முன்னால் அமர்ந்திருந்தார். விமானத்தில் ஏறியதும் அவர் தமது பயணப்பையை இருக்கைக்கு மேலிருந்த பகுதியில் வைத்தார். தங்கள் நண்பர்களுடன் இணைய தம்பதியினர் பின்பகுதிக்குச் சென்றபோது ஜாங் விரைந்து பாதிக்கப்பட்டவரின் பயணப்பையை தனது இருக்கைக்கு எடுத்துச் சென்று, 200 சிங்கப்பூர் வெள்ளி, 100 ரிங்கிட் ரொக்கம், டிபிஎஸ் வங்கியின் கடன்பற்று அட்டை ஆகியவற்றைத் திருடினார். பிறகு பயணப்பையை அது இருந்த இடத்தில் வைத்தார்.

ஜாங்கின் நடவடிக்கைகளைக் கவனித்த அவருக்கு அருகில் அமர்ந்திருந்த சிங்கப்பூரரான 59 வயது திரு கே. விஸ்வநாதன், சாங்கி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும், பாதிக்கப்பட்டவரிடம் அவரது பையிலிருந்து ஜாங் பொருள்களை எடுத்ததை தாம் பார்த்ததாகக் கூறினார்.

பாதிக்கப்பட்டவர், திரு விஸ்வநாதன் உதவியுடன் ஜாங்கை அடையாளம் கண்டு அவரைப் பிடித்தார். அவரது வருங்கால மனைவி காவல்துறையை அழைத்தார்.

காவல்துறை ஜாங்கை கைது செய்தனர். ஆனால், திருடிய பொருள்களை ஜாங் ஏற்கெனவே அப்புறப்படுத்திவிட்டதால் அவற்றை மீட்க முடியவில்லை.

ஜாங் எப்படி அவற்றை அப்புறப்படுத்தினார் என்பதை நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கவில்லை, ஆனால் காவல்துறையினர் வருவதற்கு முன்பு அவர் பலமுறை கழிவறைக்கு சென்றதாகக் குறிப்பிட்டது.

அதே விமானத்தில் அவருக்கு உடந்தையாக இருந்தவரும் பயணித்ததாக விசாரணையில் தெரியவந்தது. மார்ச் 17 அதிகாலை 2 மணிக்கு மற்றொரு ஸ்கூட் விமானத்தில் ஜாங்கும் அவருக்கு உடந்தையாக இருந்தவரும் ஹாங்காங் புறப்பட இருந்தனர்.

குறிப்புச் சொற்கள்