‘மாநாடாக்டர்’ (MaNaDr) மருந்தகத்தின் உரிமையை சுகாதார அமைச்சு டிசம்பர் 20ஆம் தேதி ரத்து செய்துள்ளது.
உரிமம் ரத்து செய்யப்பட்டதன் மூலம், 371 பீச் ரோடு சிட்டி கேட் எனும் முகவரியில் செயல்பட்ட ‘மாநாடாக்டர்’ மருந்தகம், நோயாளிகளின் குடியிருப்புகள் போன்ற தற்காலிக வளாகங்கள், தொலைத்தொடர்பு மூலம் வெளிநோயாளி மருத்துவச் சேவைகளை இனி வழங்க முடியாது.
“மாநாடாக்டர் மருந்தகத்தின் மேல் முறையீட்டு அறிக்கைகளைக் கவனமாக பரிசீலித்த பிறகு, சுகாதார அமைச்சின் விசாரணைக் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், நெறிமுறை மற்றும் மருத்துவத் தரங்களைப் புறக்கணிக்கும் ஒரு வேரூன்றிய கலாசாரம் நிறுவனத்திற்குள் இருப்பதாக சுகாதார அமைச்சு மதிப்பிட்டுள்ளது,” என்று அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
‘மாநாடாக்டர்’ மருந்தகம் கண்ட மிகப் பெரிய எண்ணிக்கையிலான மருத்துவச் சம்பவங்கள் மிகக் குறுகிய தொலைத்தொடர்பு ஆலோசனைகளைக் கொண்டிருந்ததாக அமைச்சு குறிப்பிட்டது.
உதாரணத்துக்கு, 100,000க்கும் மேற்பட்ட தொலைத்தொடர்புகள் நோயாளிகளுடன் ஒரு நிமிடம் அல்லது அதற்கும் குறைவான கால அளவு கொண்ட காணொளி அழைப்புகளை உள்ளடக்கியது என்றும் அதில் மிகக் குறுகிய நேரம் ஒரு வினாடி என்றும் விசாரணையில் தெரிய வந்தது.
“வெளிநோயாளி மருத்துவச் சேவைகளை அதன் அனைத்து மருத்துவர்களாலும் மருத்துவ ரீதியாகவும் நெறிமுறை ரீதியாகவும் பொருத்தமான முறையில் தொடர்ந்து வழங்கப்படுவதை உறுதி செய்யும் பயனுள்ள உள்கண்காணிப்பு, கட்டுப்பாடுகள் மருந்தக நிர்வாகத்தில் இல்லை,” என்று அமைச்சு கூறியது.
உரிமம் ரத்து செய்யப்பட்டதால், ‘சாஸ்’, ‘மெடிசேவ்’, ‘ஹெல்தியர் எஸ்ஜி’ போன்ற சுகாதார அமைச்சின் நிதித் திட்டங்களில் அந்த மருந்தகம் பங்கேற்க முடியாது.
பராமரிப்பு தொடர்வதை உறுதி செய்ய பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளுக்கும் ‘மாநாடாக்டர்’ மருந்தகம் உரிமம் ரத்தானது பற்றி தெரிவிக்க வேண்டும் என்று அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது. பாதிக்கப்பட்ட நோயாளிகள் அருகிலுள்ள மற்ற ‘சாஸ்’, ‘மெடிசேவ்’, ‘ஹெல்தியர் எஸ்ஜி’ மருந்தகங்களை அணுகலாம்.
தொடர்புடைய செய்திகள்
சுகாதாரப் பராமரிப்புச் சேவைகள் 2020 சட்டத்தின்படி, விதிமீறல் காரணமாக உரிமத்தை ரத்து செய்ய சுகாதார அமைச்சு பரிசீலிக்கிறது என்றும் அதைத் தடுப்பதற்கான விளக்கங்களைச் சமர்ப்பிக்கலாம் என்றும் அக்டோபர் 24ஆம் தேதி ‘மாநாடாக்டர்’ மருந்தகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கும் வெளிநோயாளி மருத்துவச் சேவைகளின் உரிமம் பெற்ற மருந்தகங்கள், அது முறையாக நடத்தப்படுவதை உறுதிசெய்ய தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும், விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அந்த மருந்தகங்கள் மீது ஒழுங்குமுறை நடவடிக்கைகளை எடுக்கத் தயக்கம் காட்டப்படாது என்றும் அமைச்சு கூறியது.

