சமூகக் குடியிருப்பு இல்லங்களின் பராமரிப்புத் தரத்தை மேம்படுத்தவும் இல்லவாசிகளின் பாதுகாப்பையும் நல்வாழ்வையும் உறுதிசெய்யும் நோக்குடனும் ‘சமூகக் குடியிருப்பு இல்லங்கள்’ மசோதா செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 8) நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.
இதனால் ஏறத்தாழ 4,000 இல்லவாசிகளைக் கொண்ட 61 சமூகக் குடியிருப்பு இல்லங்கள் அவற்றின் பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்தவும் பராமரிப்புத் தரத்தை மேம்படுத்தவும் புதிய உரிமங்களுக்கான கட்டமைப்பு முறையைப் பின்பற்ற வேண்டியிருக்கும்.
2026ல் நடைமுறைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படும் இச்சட்டத்தின் முக்கிய அம்சமாக, தரம்வாய்ந்த பராமரிப்பை நல்கும்படி இல்லங்களுக்கான தெளிவான அளவுகோல்கள் வரையறுக்கப்படும்.
இந்த மசோதா மீதான விவாதத்தின்போது நாடாளுமன்ற அவையில் உரையாற்றிய சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா, “இல்லங்களின் பராமரிப்புத் தரத்தை மேம்படுத்துவதன் தொடர்பில் பல ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள நல்ல முன்னேற்றத்தை வகைப்படுத்த அமைச்சு எடுத்த செயல்திறன்மிக்க நடவடிக்கை இந்த மசோதா,” என்று தெரிவித்தார்.
அதன்படி, இல்லங்களை நிர்வகித்தல், வளாக மேலாண்மை, இல்லவாசிகளை நடத்தும் முறை உள்ளிட்டவற்றுக்கான நடைமுறை விதிகளை அமைச்சு வழங்கும்.
சமூகக் குடியிருப்பு இல்லங்கள்ளைப் புதிய உரிமக் கட்டமைப்பிற்குள் உள்ளடக்கும் இம்முயற்சிக்கு ஆதரவளிக்க நிலைமாற்றம் ஆதரவு தொகுப்புத் திட்டத்திற்கு சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சும் தேசிய சமூகச் சேவை மன்றமும் $33 மில்லியன் நிதியாதரவு வழங்கவுள்ளன.
இத்துறைகளில் தங்கள் ஊழியர்களுக்குப் பயிற்சியளிக்க இல்லங்கள் இந்நிதியைப் பயன்படுத்தலாம். கண்காணிப்புக் கருவிகளை நிறுவுதல் போன்ற சட்டத்தின்கீழ் உள்ள பிற தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கான செலவுகளையும் இத்திட்டம் ஈடுசெய்ய உதவும் என்று அமைச்சின் அறிக்கை சுட்டியது.
மேலும், இம்மசோதா வாயிலாக இல்ல குடியிருப்பாளர்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய குறிப்பிட்ட சில இடங்களில் கண்காணிப்புக் கருவிகள் பொருத்துவது கட்டாயமாக்கப்படுகிறது. ஆனால், இந்த நடைமுறை தற்போது கட்டாயமன்று.
தொடர்புடைய செய்திகள்
இந்த விதிகளை மீறுவது இல்லத்தின் உரிமத்தை ரத்து செய்தல் அல்லது இல்லம் இயங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது போன்ற ஒழுங்குமுறை நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என்று அமைச்சின் அறிக்கை சுட்டியது.
எடுத்துக்காட்டாக, இச்சட்டத்தின்கீழ் உரிமமின்றி இல்லம் நடத்தினால் $100,000 வரை அபராதம் அல்லது ஈராண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
மசோதாவின் முக்கிய அம்சமாக, பாதுகாப்பையும் நல்வாழ்வையும் உறுதிசெய்வதற்கான வலுவான நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன.
இல்லங்களில் வசிக்கும் முதியோர், சிறார், உடற்குறையுள்ளோருக்கு ஆதரவுடன் பராமரிப்பை அளிக்கும் அதேவேளையில், தீங்கு விளைவிக்கும் அபாயத்திலிருந்து அவர்களைக் காப்பதும் முக்கியம் என்ற நோக்குடன் பல முக்கியக் கூறுகளுடன் இச்சட்டம் நடப்புக்கு வரவிருக்கிறது.
இதன்படி, இல்லவாசிகளுக்கு நேரடிப் பராமரிப்பு வழங்குவோர் அதற்கான உகந்த மதிப்பீட்டை மேற்கொள்வது இனி கட்டாயமாகும்.
மேலும் உரிமதாரர்கள், முக்கியப் பொறுப்பு வகிப்போர், ஊழியர்கள், குறிப்பிட்ட சில கடமைகளைச் செய்யும் பிற நபர்களுக்கும் இந்த மதிப்பீடு பொருந்தும்.
மசோதா விவரிக்கும் மற்றோர் அம்சம், உடல்வலுவைப் பயன்படுத்துவதைச் சார்ந்தது.
“தற்போது உடற்குறையுள்ள பெரியவர்களுக்கான இல்லங்களில் ஒருசில இல்லவாசிகளின் பாதுகாப்புக்காக, சக்கரநாற்காலியில் இருந்து அவர்கள் விழாமல் இருப்பதை உறுதிசெய்ய துணிப்பட்டைகளை பயன்படுத்துகின்றன,” என்று அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.
இப்புதிய சட்டத்தின் வாயிலாக, இல்லவாசிகளைக் கட்டுப்படுத்த துணிப்பட்டைகள், கால் பட்டிகள் உள்ளிட்ட நடவடிக்கைகளைக் குறிப்பிடத்தகுந்த சூழ்நிலைகளில் மட்டுமே பயன்படுத்த இயலும். அதை மீறும் ஊழியர்கள், சட்டத்தின்கீழ் ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடலாம்.
இதற்கிடையே, இதன்தொடர்பில் பேசிய திரு சுவா, இந்த நெறிமுறைகள் சார்ந்த அளவுகோல்களை அமைச்சு அமைக்கும் என்றார்.
இந்த மசோதாவின்கீழ், சமூகக் குடியிருப்பு இல்லங்களில் தன்னிச்சை சோதனைகளை நடத்த பார்வையாளர் குழுவையும் அமைச்சு நியமிக்கவுள்ளது.
தற்போது நல இல்லங்கள், சிறுவர் இல்லங்களில் இந்த நடைமுறை உள்ளது என்ற திரு சுவா, இம்மசோதா வாயிலாக இதனை மற்ற இல்லங்களுக்கும் விரிவுபடுத்துவதாகவும் சொன்னார்.
புதிய சட்டம், தவறிழைக்கும் இல்ல நடத்துநர்களுக்கு எதிரான அமலாக்கக் கட்டமைப்பையும் தாங்கி வந்துள்ளது.
எடுத்துக்காட்டாக, இல்லங்களில் வசிப்போரின் பராமரிப்பை உறுதிசெய்யத் தவறும் நடத்துநர்களின் இல்லத்தை ஆணை மூலமாக தற்காலிகமாக கையகப்படுத்தமுடியும்.
அந்தச் சூழ்நிலைகளில் ‘ஸ்டெப் - அப்’ எனும் உட்புகு உத்தரவுமூலம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சுக்கு அதிகாரங்களை இச்சட்டம் வழங்கவுள்ளது. தற்போது, அத்தகைய சட்டரீதியான அதிகாரம் அமைச்சுக்கு இல்லை.
முதற்கட்டமாக, இந்த மசோதாவின் அடிப்படையில், நீண்டகால மற்றும் 24/7 இல்லப் பராமரிப்பை வழங்கும் சமூகக் குடியிருப்பு இல்லங்கள் அமைச்சிடமிருந்து உரிமம் பெறவுள்ளன.
உடற்குறையுள்ள பெரியவர்களுக்கான இல்லங்கள், சிறுவருக்கும் இளையோருக்குமான இல்லங்கள், பாதுகாப்பு இல்லங்கள், நல இல்லங்கள் ஆகியன இந்த மசோதாவின்கீழ் இடம்பெறவுள்ளன.
இந்த வரையறைக்குள் வரும் சமூகக் குடியிருப்பு இல்லங்களை நடத்துவோருடன் கலந்தாலோசிக்கப்பட்டு, அந்தந்த இல்லங்களுக்கான உரிமம் வழங்குவதற்கான அமைச்சின் நோக்கம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.

