தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நவம்பரில் உற்பத்தித் துறை 8.5% வளர்ச்சி

2 mins read
2af9df03-2428-4251-91f7-794853e7101e
சிங்கப்பூர் உற்பத்தித் துறையின் வளர்ச்சியில் கிட்டத்தட்ட பாதிப் பங்கு வகிக்கும் மின்னணுவியல் துறை 26.2 விழுக்காடு வளர்ச்சி கண்டது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் உற்பத்தித் துறை நவம்பரில் தொடர்ந்து ஐந்தாவது மாதமாக வளர்ச்சி கண்டுள்ளது.

மின்னணுப் பொருள்களின் உற்பத்தி அதிகரித்தது இதற்குக் காரணம்.

அமெரிக்காவில் திரு டோனல்ட் டிரம்ப் அதிபராகப் பதவியேற்ற பிறகு புதிய வரிகள் விதிக்கப்படலாம் என்பதால் நிறுவனங்கள் மின்னணுப் பொருள்களை வாங்கிக் குவிக்கும் நிலையில் அவற்றின் உற்பத்தி அதிகரித்துள்ளது.

ஆண்டு அடிப்படையில் மொத்த உற்பத்தி 8.5 விழுக்காடு அதிகரித்துள்ளது.

இருப்பினும் புளூம்பெர்க் கருத்தாய்வில் கலந்துகொண்ட பொருளியலாளர்களின் முன்னுரைப்பைவிட அது குறைவு. நவம்பரில் 9.7 விழுக்காட்டு வளர்ச்சி பதிவாகும் என்று அவர்கள் முன்னுரைத்திருந்தனர்.

உயிர்மருத்துவத் துறை உற்பத்தியைத் தவிர்த்து, மொத்த உற்பத்தி 13 விழுக்காடு வளர்ச்சி அடைந்தது.

பொருளியல் வளர்ச்சிக் கழகம் டிசம்பர் 26ஆம் தேதி வெளியிட்ட புள்ளிவிவரங்கள் இதைத் தெரிவித்தன.

திரு டிரம்ப் பதவியேற்பதற்கு முன்பாகவே சீன ஏற்றுமதியாளர்கள் அமெரிக்காவுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு மின்னணுப் பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கான அறிகுறிகள் தென்படுவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். இதனால் சிங்கப்பூரில் உற்பத்தியாகும் இடைநிலைப் பொருள்களுக்கான தேவை அதிகரிக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

சிங்கப்பூர் உற்பத்தித் துறையின் வளர்ச்சியில் கிட்டத்தட்ட பாதிப் பங்கு வகிக்கும் மின்னணுவியல் துறை நவம்பர் மாதம், ஆண்டு அடிப்படையில் 26.2 விழுக்காடு வளர்ச்சி கண்டது. அக்டோபரில் அந்த விகிதம் 4.3 விழுக்காடாக இருந்தது.

இவ்வேளையில் கணினிச் சில்லுகளின் உற்பத்தி இனி மெதுவடையும் என்று வல்லுநர்கள் சிலர் கருதுகின்றனர். அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கை தொடர்பான நிச்சயமற்றதன்மை பொருளியல் நடவடிக்கைகளைப் பாதிக்கும் என்பது அவர்கள் கருத்து. அமெரிக்காவின் புதிய வரிகள் சிங்கப்பூர் உற்பத்தியைக் குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கும் என்று அவர்கள் கருதுகின்றனர்.

உயிர்மருத்துவத் துறை உற்பத்தி சென்ற ஆண்டைவிட 21.2 விழுக்காடு சரிந்தது. பொதுவான உற்பத்தி 2.6 விழுக்காடு குறைந்தது. போக்குவரத்துப் பொறியியல் துறையில் உற்பத்தி 1.8 விழுக்காடு வீழ்ச்சி கண்டது. வேதியியல் துறை உற்பத்தி 1.1 விழுக்காடு சுருங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்