முதியவரிடம் கனிவன்பு: உணவுக் கடைக்காரருக்குக் குவியும் பாராட்டு

முதியவரிடம் கனிவன்பு: உணவுக் கடைக்காரருக்குக் குவியும் பாராட்டு

படம்: மெல்வின் சியூ

31 Oct 2026 - 8:01 pm

2 mins read

உணவங்காடிக்கடை ஒன்றுக்கு முதியவர் ஒருவர் வாரந்தோறும் சென்று வருவது நெகிழ்ச்சியூட்டும் ஒரு வழக்கமாக மாறியுள்ளது.

சைனாடவுனில் ‘ஜின் ஜி தியோச்சியூ பிரைஸ்டு டக் & குவே சாப்’ கடையை நடத்தி வரும் 47 வயது மெல்வின் சியூ, எழுபதுகளில் இருக்கும் அந்த முதியவர் தமது கடைக்குத் தவறாமல் வருவார் என்றும் அவருக்குத் தாம் இலவசமாக ‘குவே சாப்’ உணவு வழங்கி உபசரிப்பதாகவும் ஏசியாஒன் செய்தித்தளத்திடம் தெரிவித்தார்.

“அவருக்கு மன இறுக்கம் (ஆட்டிசம்) உள்ளது. எனவே அவருக்கு ஆதரவளிக்கும் வகையில் நாங்கள் எப்போதும் அவரிடமிருந்து செய்தித்தாள்களை வாங்குவது வழக்கம்,” என்று குறிப்பிட்ட சியூ, அவர் தியோங் பாரு உணவங்காடி மையத்தில் செய்தித்தாள்களை விற்றுக்கொண்டிருந்தபோதுதான் முதன்முதலில் அறிமுகமானார் என்றும் கூறினார்.

ஒருமுறை அவர் சியூவின் கடையைக் கடந்து சென்றபோது, உணவு சாப்பிட விரும்புவதாகத் தெரிவித்தார். உடனே சியூ அவருக்கு உணவளித்தார். அதுவே நாளடைவில் ஒரு வழக்கமான நிகழ்வாக மாறியது.

“வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை முதியவர் வருகிறார். அவர் செய்தித்தாள்களை விற்ற காலத்தில் நாங்கள் அவருக்கு ‘காப்பி காசு’ வழங்கி வந்ததால், ஒவ்வொரு முறை அவர் சாப்பிட்ட பிறகும் அவருக்கு $5 கொடுப்பதை அப்படியே தொடர்ந்தோம்,” என்று சியூ கூறினார்.

தங்களுக்கு இடையேயான பிணைப்பு வியாபாரி - வாடிக்கையாளர் உறவைவிட நட்புக்கு நெருக்கமானது என்று குறிப்பிட்ட சியூ, அந்த முதியவரைக் கவனித்துக் கொள்வதைத் தொடர்வதில் தமக்கு மகிழ்ச்சி என்றார்.

உதவிதேவைப்படும் அனைவருக்கும் தம்மால் உதவ முடியாது என்றாலும், சிறிய அளவிலான கருணைச் செயல்கள்கூட மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என அவர் நம்புகிறார்.

திரு சியூவின் இந்தச் செயல் இணையவாசிகளின் பாராட்டைப் பெற்றுள்ளது. பலர் அவரது தாராள மனப்பான்மையைப் போற்றியதுடன், தொடர்ந்து இத்தகைய நற்செயல்களைச் செய்யுமாறு அவரை ஊக்குவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்