சில குறிப்பிட்ட வாகனப் பதிவு எண்களைக் கொண்ட ஓட்டுநர்கள் ‘ஆபத்தானவர்கள்’ என்று பெண் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
ஆனால், அவரது கருத்தை அனைவரும் ஏற்கவில்லை.
சக்யா டான் என்ற பெண் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், வெள்ளிக்கிழமை (அக்டோபர் 23) டிக்டாக் தளத்தில் வெளியிட்ட பதிவில், சில குறிப்பிட்ட வாகனப் பதிவு எண்களைக் கொண்ட ஓட்டுநர்களைத் தாம் தவிர்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தம்மை ஃபெங் சுயி எனப்படும் சீன வாஸ்து மற்றும் எண் கணித மேதை என்று கூறிக்கொள்ளும் அந்தப் பெண், சிங்கப்பூர் சாலைகளில் வாகன ஓட்டுநர்கள் எப்போதும் அவசரமாகச் செல்வதால் விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படுவதாகக் கூறியுள்ளார்.
“நாங்கள் ஆபத்தானவை எனக் கருதும் வாகனப் பதிவு எண்களைத் தவிர்க்க முயல்கிறோம்,” என்று கூறிய டான், சில ஈரிலக்க, மூவிலக்கப் பதிவு எண்களைக் கொண்ட வாகனங்களின் ஓட்டுநர்கள் குறித்து எச்சரித்தார்.
தமது இந்தக் கணிப்புகள் சீன வாஸ்து அறிவின் அடிப்படையில் உருவான எண் கணிதத்திலிருந்து பெறப்பட்டவை என்று அவர் விளக்கினார்.
மேலும், இத்தகைய ஓட்டுநர்கள் உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாக இருப்பதோடு, பிற வாகன ஓட்டிகளுடன் மோதல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பும் அதிகம் என்று அவர் குறிப்பிட்டார்.
டிக்டாக்கில் வெளியான அவரது காணொளி 12,000க்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. அதனைக் கண்டோரில் பலர் சந்தேகத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
சில பயனர்கள், இந்த உரிமத் தகடு எண்களைக் கொண்ட கார்களை எதிர்கொள்வதை முற்றிலுமாகத் தவிர்ப்பது சாத்தியமில்லை என்று பகிர்ந்துள்ளனர்.
இது அர்த்தமற்றது என்று தெரிவித்துள்ள மற்றொரு பயனர், டானின் கணிப்புகளின் பின்னணியில் உள்ள கொள்கையறிவு குறித்து கேள்வி எழுப்பி உள்ளார்.
