கறி பஃப் வாங்க சீனாவிலிருந்து சிங்கப்பூர் வந்ததாக ஆடவர் கூறியதால் பலர் வியப்பு

கறி பஃப் வாங்க சீனாவிலிருந்து சிங்கப்பூர் வந்ததாக ஆடவர் கூறியதால் பலர் வியப்பு

2 mins read
548e8859-989b-4045-8bbf-d776449246f3
கறி பஃப் வாங்குவதற்காக சீனாவிலிருந்து சிங்கப்பூர் வந்ததாக ஒருவர் காணொளியில் கூறியிருப்பது பலரை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. - படம்: Chloe/XIAOHONGSHU
Google News Preferred Icon

சிங்கப்பூரில் கறி பஃப் வாங்குவதற்காகவே சீனாவிலிருந்து விமானத்தில் இங்கு வந்ததாக ஒரு நபர் கூறியதால் பலர் வியப்படைந்தனர்.

கறிபஃப் அடங்கிய பெட்டி ஒன்றை வாங்குவதற்காக தனக்குப் பணம் கொடுத்து சிங்கப்பூருக்கு வாடிக்கையாளர் ஒருவர் அனுப்பி வைத்ததாக அந்த நபர் கூறினார்.

‘மேய்த்வான்’ என்ற சீனாவின் மிகப்பெரிய உணவு விநியோக நிறுவனத்தின் சீருடை அணிந்திருந்த அவரது காணொளி சீன சமூக ஊடகத் தளமான ‘ஷியாவோஹோங்ஷூ’வில் பதிவேற்றப்பட்டிருந்தது.

மஞ்சள் நிறச் சட்டையும் தலைக்கவசமும் அணிந்து, சிங்கப்பூரின் பாய லேபார் குவார்ட்டர் மாலில் உள்ள ‘ஹோங் லிம் கறி பஃப்’ கடையில் ஒரு பெட்டி கறி பஃப் அவர் வாங்குவதுபோல காணொளியில் காட்டப்பட்டிருந்தது.

காணொளியைப் பதிவு செய்த நபரிடம் பேசிய அவர், வாடிக்கையாளர் ஒருவர் தன்னை சிங்கப்பூருக்கு அனுப்புவதற்காக ஏறக்குறைய 2,400 யுவான் (S$450) செலவழித்ததாகக் கூறினார்.

உருளைக்கிழங்கு, சார்டின் கறி பஃப் அடங்கிய ஒரு பெட்டியின் விலை $13.50.

இதற்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டது என்பதையோ வாடிக்கையாளர் யார் என்பதையோ அந்த நபர் தெரிவிக்கவில்லை.

ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 6) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த ஹோங் லிம் கறி பஃப் நிறுவனத்தின் நிறுவனர் விக்டோரியா லோ, 37, இந்தச் சம்பவம் ஆகஸ்ட் 31ஆம் தேதி நடந்ததாகக் கூறினார்.

மாண்டரின் மொழி பேசத் தெரியாத தனது பகுதி நேர ஊழியர், அந்த நபர் கடைக்கு வந்தபோது உதவிக்காக தன்னை அழைத்ததாக அவர் தெரிவித்தார்.

அந்த நபர் சீனாவில் பயன்படுத்தப்படும் ‘வீசாட் பே’ அல்லது ‘அலிபே’ மூலம் பணம் செலுத்த முடியுமா என்று கேட்டார். ஆனால் அந்தக் கட்டண முறைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கடையில் இருந்த ஊழியர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அனைத்துலக விநியோகச் சேவைகள் எதையும் தனது நிறுவனம் வழங்கவில்லை என்று சீனாவின் உணவு விநியோக நிறுவனமான மேய்த்வான் தெளிவுபடுத்தியுள்ளது.

சீன மொழி நாளிதழான ‘லியான்ஹ சாவ்பாவ்’ செப்டம்பர் 5ஆம் தேதி வெளியிட்ட செய்தியில், எல்லை தாண்டிய உணவு விநியோகம் அல்லது பொருள்களை வாங்கித் தரும் சேவைகளை தாங்கள் தொடங்கவில்லை என்று மேய்த்வான் கூறியுள்ளது.

மேய்த்வான் செயலியில் உள்ள உரையாடல் தளம் வழியாக சாவ்பாவ் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டிருந்தது.

அதற்குப் பதிலளித்த அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை ஊழியர் ஒருவர், விநியோக ஊழியரை சிங்கப்பூருக்கு விமானத்தில் அனுப்பி வைத்ததாகக் கூறப்படுவதை மறுத்தார்.

அனைத்துலகச் சேவைகளை தற்போது வழங்கவில்லை என்றும் அவர் விளக்கமளித்தார்.

குறிப்புச் சொற்கள்
உணவுவிநியோகம்செயலிசீனாசிங்கப்பூர்