ஜூரோங் வட்டாரத்தில் உள்ளரங்குகளில் பயன்படுத்தக்கூடிய வரைபடச் செயலியை உபயோகிக்கலாம்.
ஜெம் கடைத்தொகுதி, இங் தெங் ஃபோங் (Ng Teng Fong) மருத்துவமனை உள்ளிட்ட இடங்கள் சிட்டிஜெனி (CitiGeni) செயலியில் உள்ள அந்த வரைபடத்தில் இடம்பெற்றுள்ளன. உடற்குறையுள்ளோர் பயன்படுத்துவதற்கான இடையூறுகள் இல்லாத பாதைகளையும் அந்தச் செயலி எடுத்துக்காட்டும்.
கண்பார்வைப் பிரச்சினைகள் இருப்போருக்கு உதவும் அம்சங்களும் வரைபடத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைத்தொகுதியில் செல்லும்போது அவர்களுக்கு உதவ ஒலிவழிக் குறிப்புகள் இருக்கும்.
சிட்டிஜெனி செயலியை இலவசமாகப் பயன்படுத்தலாம். ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் (iOS), கூகலின் ஆண்ட்ராய்ட் (Android) ஆகிய இரு தளங்களிலும் அச்செயலியைப் பயன்படுத்தலாம்.
கடந்த அக்டோபர் மாதம் 23ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட சிட்டிஜெனி செயலியை, புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ஹாங்காங் நிறுவனமான மேப்க்ஸஸ் (Mapxus), தேசிய பல்கலைக்கழக சுகாதார முறை (NUHS) ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ளன.
குறிப்பாக உடற்குறையுள்ளோருக்கு உள்ளரங்குகளில் நடமாட உதவுவது செயலியின் நோக்கமாகும்.