தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
பெருந்திட்டத்துடன் பேரளவு வளர்ச்சியடைய இலக்கு

மார்சிலிங் - இயூ டீ குடியிருப்பாளர்கள் வாழ்க்கைத்தர மேம்பாட்டுக்கு புதிய திட்டங்கள்

2 mins read
e06ea633-01c9-492f-a401-e650910b6a00
மார்சிலிங் - இயூ டி நகர மன்றத்தின் ஐந்தாண்டுப் பெருந்திட்டத் (2025-2030) தொடக்க நிகழ்ச்சியின் அங்கமாக மார்சிலிங் - இயூ டீ நகர மன்ற தினக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. பிரதமர் லாரன்ஸ் வோங் அதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். - படம்: மார்சிலிங் - இயூ டீ நகர மன்றம்

மார்சிலிங் - இயூ டீ வட்டாரக் குடியிருப்பாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்குடன் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் முக்கிய மேம்பாட்டுத் திட்டங்களை அறிவித்துள்ளார்.

சனிக்கிழமை (ஏப்ரல் 5) நடைபெற்ற மார்சிலிங் - இயூ டீ நகர மன்றத்தின் ஐந்தாண்டுப் பெருந்திட்டத் (2025-2030) தொடக்க நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பிரதமர் வோங், டௌன்டவுன் ரயில் பாதை விரிவாக்கம், சுங்கை காடுட் சுற்றுச்சூழல் வட்டார மேம்பாடு உள்ளிட்ட பல மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து அறிவித்தார்.

டௌன்டவுன் ரயில் பாதை இரண்டு புதிய நிலையங்களுடன் சுங்கை காடுட் வரை நீட்டிக்கப்படவுள்ளது. இதன்மூலம் சுங்கை காடுட் பகுதியிலும், இயூ டீ அருகிலும் புதிய ரயில் நிலையங்கள் அமையவுள்ளன.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், “இத்திட்டம் டௌன்டவுன் வட்டாரத்துக்கான பயண நேரத்தைக் குறைக்கும்,” என்று குறிப்பிட்டார்.

மறுமலர்ச்சி பெறவிருக்கும் மார்சிலிங் - இயூ டீ

திரு வோங் அறிவித்த மற்றொரு மேம்பாட்டுத் திட்டம் சுங்கை காடுட் சுற்றுச்சூழல் வட்டாரத்திற்கானது.

“சுங்கை காடுட் தொழிற்பேட்டையின் முழுமையான மறுசீரமைப்பைச் சார்ந்தது சுங்கை காடுட் சுற்றுச்சூழல் வட்டார மேம்பாட்டுத் திட்டம்.

“இத்திட்டம் புதிய வாய்ப்புகளையும், வீட்டிற்கு அருகில் வேலைகளையும் உருவாக்கும்,” என்றார் அவர்.

முன்னர் குதிரைப் பந்தயம் நடைபெற்ற கிராஞ்சி பகுதியானது வீடமைப்பு உள்ளிட்ட மேம்பாடுகளுடன் மறுசீரமைப்பு காணவுள்ளது.

மார்சிலிங் - இயூ டீ வட்டாரத்தை அனைத்து வயதினருக்கும் ஏற்ற துடிப்புமிக்க சமூகமாக மாற்றும் நோக்கத்துடன் நிறுவப்பட்டுள்ள ஐந்தாண்டுப் பெருந்திட்டத்தின் மற்றோர் அம்சமாக, உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி பேரளவிலான மறுசீரமைப்பைக் காணவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“எல்லா நேரங்களிலும் நெரிசலுடன் காணப்படும் உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி மறுமேம்பாடு செய்யப்படவுள்ளது.

“மேற்கூறிய திட்டங்கள் அனைத்தும் முடிவடைய ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாக நேரமெடுக்கும். ஆயினும் இதற்கான பணிகளை அடுத்த சில ஆண்டுகளில் தொடங்கவிருக்கிறோம்,” என்று விளக்கினார் திரு வோங்.

இத்திட்டங்கள் நிறைவுறும்போது, இவையனைத்தும் மார்சிலிங் - இயூ டீ குழுத்தொகுதியை முழுமையாக உருமாற்றியிருக்கும் என்றார் அவர்.

மார்சிலிங் - இயூ டீ குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு வோங், அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் சில திட்டங்களை மக்கள் எதிர்பார்க்கலாம் என்றும் கூறினார்.

அவற்றுள் ஜோகூர் பாரு - சிங்கப்பூர் விரைவு ரயில் சேவை (RTS), அட்மிரல்டி ரோடு வெஸ்ட் தொடங்கி லென்டோர் அவென்யூ வரை அமையவுள்ள புதிய வடக்கு - தெற்குப் பாதையின் மேம்பாலச் சாலை, மார்சிலிங், இயூ டீயில் புதிய சமூக மன்றங்கள் உள்ளிட்ட இரண்டாம்நிலைத் திட்டங்களும் அடங்கும்.

பெருந்திட்டங்களை அறிவித்த பிரதமர், “இவை புதியவற்றைக் கட்டமைக்கும் நடவடிக்கைகள் மட்டுமல்ல. உள்ளங்களை இணைத்து, கட்டமைப்பு வசதிகளைப் பயன்படுத்தி பிறரைப் பராமரிப்பதும்கூட,” என்று கூறினார்.

குறிப்புச் சொற்கள்