வாழ்நாள் ஆரோக்கியத்தை வளர்க்கும் தற்காப்புக் கலை

2 mins read
1504bdf7-cc61-4913-8036-d289e9b25b5a
தேசியப் பயிற்சி நிலையத்தில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒன்றுகூடிப் பயிற்சிசெய்யும் ‘டீம் கோல்ட்’ குழுவினர். - படம்: சிஎன்ஏ
திருவாட்டி லின்டா சிம், 71,  தெக்வாண்டோ விருதை அவரது வயதுப் பிரிவில் பெற்றவர்.
திருவாட்டி லின்டா சிம், 71, தெக்வாண்டோ விருதை அவரது வயதுப் பிரிவில் பெற்றவர். - படம்: சிஎன்ஏ

முதுமையில் பலரும் சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்வது வழக்கம். ஆயினும் இளமையில் உடற்பயிற்சி முதுமைக்காலத்தில் எந்த அளவு வாழ்க்கையில் உடல்நலத்தைக் கட்டிக்காக்க உதவும் என்பதற்கு எடுத்துக்காட்டாகச் சிங்கப்பூரில் மூப்படைந்த பலர் உள்ளனர்.

‘தெக்வாண்டோ’ எனப்படும் தற்காப்புக் கலையை கற்றுத் தேர்ந்தவர்கள் அதனை முதுமையிலும் தொடர்ந்து பயிற்சி செய்து பலனடைகின்றனர். அவர்களில் 50 வயதுடைய ஒருவர் இளமையானவர் என்று அக்கலையின் பயிற்றுநரால் வகைப்படுத்தப்பட்டுள்ளார். ஆக முதியவர், 84 வயதை எட்டிய திரு ஹெரி ஹான் என்பது வியப்பூட்டுகிறது.

சிங்கப்பூர் தெக்வாண்டோ சங்கத்தின் முதியோருக்கான பிரிவில் 50 வயது தொடங்கி, 70 வயது, 80 வயதுள்ளோர் எனப் பல முன்னாள் விளையாட்டாளர்கள் இன்றளவும் ஒன்றுகூடிப் பயிற்சி செய்கின்றனர். அவர்களின் உற்சாகம், மனவுறுதி, தன்னம்பிக்கை ஆகியவை பலருக்கு வியப்பூட்டும். பயிற்சி வழங்கும் பயிற்றுநர்களில் 78 வயது ஸ்டீவன் சோவும் அடங்குவார்.

பயிற்சியைத் தொடங்கியவுடனே உறுப்பினர்கள் அவர்களின் இளமைக் காலத்திற்குச் சென்றுவிடுகின்றனர். குறிப்பிட்ட வகையில் தாவி அல்லது சுழன்று உதைப்பது போன்றவற்றைச் செய்ய முடியாவிட்டாலும் தற்காப்புக் கலையின் அடிப்படை உடற்பயிற்சிகளில் அவர்களால் எளிதாக ஈடுபட முடிகிறது.

‘டீம்கோல்ட்’ என்று பெயரிடப்பட்ட இந்தக் குழுவினருக்குப் பயிற்சிகள் சற்று வேறுபட்டு வழங்கப்படுகின்றன. இருப்பினும் அவர்கள் பயிற்சியை முக்கியமாகக் கருதுகின்றனர். எவ்வித சலிப்போ சோர்வோ அவர்களை அண்டவிடாமல் பார்த்துக்கொள்கின்றனர்.

சிங்கப்பூர் தெக்வாண்டோ சங்கம் அந்தக் குழுவை 10 உறுப்பினர்களுடன் 1994ஆம் ஆண்டு தொடங்கியது. அவர்களில் பலர் சிங்கப்பூரைப் பல உலகப் போட்டிகளில் பிரதிநிதித்த தேசிய விளையாட்டாளர்கள் ஆவர். ‘கறுப்பு இடைவார்’ எனப்படும் ஆக உயரிய தற்காப்புத் தர நிலையை அடைந்தவர்கள்.

சிங்கப்பூரில் ‘கிளப் டைமன்’ என்று இயங்கும் மற்றொரு தற்காப்புக் கலைக் குழுவும் உள்ளது. தெக்வாண்டோ கழகம் உருவாக்கிய இப்பிரிவில் பெண்களுக்குத் தனிப்பட்ட முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. கறுப்பு இடைவார் தகுதி இல்லாத 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் சிறப்புப் பயிற்சி பெறுகின்றனர்.

இக்கலையை அதிக அளவில் பெண்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று அக்குழுவை உருவாக்கிய 71 வயது திருவாட்டி லின்டா சிம் நம்பிக்கை தெரிவித்தார். அவரது வயதுப் பிரிவில் அக்கலையில் அவர் உலக விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்