தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சில பள்ளிவாசல்களுக்கு இறைச்சி உள்ள பொட்டலங்கள் அனுப்பப்பட்டன: சண்முகம்

2 mins read
4927f531-9e19-4209-814b-800e7eb53fbb
அல் இஸ்திகாமா பள்ளிவாசலில் வியாழக்கிழைமை (செப்டம்பர் 25) செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் கா. சண்முகம். - படம்: பெரித்தா ஹரியான்

சிராங்கூன் நார்த் வட்டாரத்தில் உள்ள அல் இஸ்திகாமா பள்ளிவாசலுக்கு புதன்கிழமை (செப்டம்பர் 24) அனுப்பப்பட்ட சந்தேகத்துக்குரிய பொட்டலத்தில் இறைச்சி இருந்ததாக உள்துறை அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்துள்ளார்.

அந்தப் பள்ளிவாசலுக்கு மட்டும் சந்தேகம் தரும் பொட்டலம் அனுப்பப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

வழிபாட்டுத் தலங்களைக் குறிவைத்து இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றார் அவர். இத்தகைய செயல்களை சிங்கப்பூர் அறவே சகித்துக்கொள்ளாது என்றும் திரு சண்முகம் எடுத்துரைத்தார்.

அல் இஸ்திகாமா பள்ளிவாசலில் வியாழக்கிழமை (செப்டம்பர் 25) திரு சண்முகம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்பள்ளிவாசலுக்கு அனுப்பப்பட்ட பொட்டலத்தில் இருந்தது எந்த இறைச்சி என்பதை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்து வருவதாக அவர் கூறினார். எனினும், அது பன்றி இறைச்சி போல் முதலில் தென்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

பொட்டலத்தில் இருந்தது என்னவாக இருந்தாலும் சரி, இச்செயல் பிரச்சினையைத் தூண்டும் ஒன்று என்றும் விசாரணை தொடர்கிறது என்றும் திரு சண்முகம் குறிப்பிட்டார்.

“நோக்கம் எதுவாக இருந்தாலும், இது நெருப்புடன் விளையாடும் செயலாகும். இந்த விவகாரத்தை நாங்கள் மிகுந்த அக்கறையுடன் அணுகுகிறோம். இதற்கு பொறுப்பானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம்,” என்று அமைச்சர் சண்முகம் எச்சரிக்கை விடுத்தார்.

தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு சண்முகம், இதுபோன்ற சம்பவங்கள் சிங்கப்பூர் முழுவதும் உள்ள இதர பள்ளிவாசல்கள் சிலவற்றிலும் அண்மையில் நிகழ்ந்ததாகத் தெரிவித்தார்.

அச்சம்பவங்கள், அல் இஸ்திகாமா பள்ளிவாசல் சம்பவத்துடன் தொடர்புடையவையா என்பதை அவர் தெரிவிக்கவில்லை. ஆனால் அச்செயல்கள் குறித்து காவல்துறையிடம் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

“ஊகச் செய்திகள் குறித்து கவனத்துடன் இருக்க வேண்டும். யார் இதைச் செய்தார்கள் என்பதும் அதற்கான நோக்கங்கள் என்ன என்பதும் தெரியவில்லை. ஆனால், இந்தத் தொடர் சம்பவங்கள் பள்ளிவாசல்களை மட்டும் குறிவைத்து நடத்தப்பட்டதுபோலத் தெரிகிறது,” என்று திரு சண்முகம் விளக்கமளித்தார்.

காவல்துறையினர் பள்ளிவாசல்களுக்குச் சென்று சோதனை நடத்துவதை அதிகரித்திருப்பதாக திரு சண்முகம் தெரிவித்தார். அவர்கள் தொடர்ந்து அவ்வாறு செய்வர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சென்ற ஆண்டு நவம்பர் மாதம் புக்கிட் தீமா வட்டாரத்தில் உள்ள செயின்ட் ஜோசஃப் தேவாலயத்தில் கத்தோலிக்க சமயகுரு தாக்கப்பட்டதை திரு சண்முகம் நினைவூட்டினார். வழிபாட்டுத் தலங்களைத் தாக்குதல் கோட்டைகளாக மாற்றவேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்