ஊடக, தொடர்புத்துறை வல்லுநர் நஸ்ரத் ஹசான் காலமானார்

ஊடக, தொடர்புத்துறை வல்லுநர் நஸ்ரத் ஹசான் காலமானார்

2 mins read
0462ef43-4262-4aa9-b5d4-d5ebb07979aa
திருவாட்டி நஸ்ரத் ஹசான் அக்டோபர் 16ஆம் தேதி காலமானார்.  - படம்: நஸ்ரத் ஹசான் / ஃபேஸ்புக்

சமூகம், மொழி, ஊடகம் எனப் பல்வேறு துறைகளிலும் தனக்கென்று ஒரு தனியிடம் பிடித்திருந்த திருவாட்டி நஸ்ரத் ஹசான் புதன்கிழமை (அக்டோபர் 16) காலமானார். 

கல்வி அமைச்சில் தொலைத்தொடர்பு மற்றும் அலுவல் திட்டமிடல் மூத்த துணை இயக்குநராகச் செயல்பட்டு வந்த 45 வயது திருவாட்டி நஸ்ரத்தின் மறைவிற்கு சமூகத்தில் பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

“திருவாட்டி நஸ்ரத் என்ற பெயரைக் கேட்டவுடனே நினைவுக்கு வருவது அனைத்திலும் முன்மாதிரிப் பெண்மணியாகத் திகழ்ந்த அவரது பாங்கு,” என்று கூறினார் சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்கின் தலைவர் ராஜா முக­மது மைதீன்.

பல ஆண்டுகளுக்கு முன்பு ‘எதிரொலி’ நிகழ்ச்சிக்காக அவரை முதன்முறை சந்தித்ததாக நினைவுகூர்ந்த திரு ராஜா முகமது, “அவர் கொண்டிருந்த தன்னம்பிக்கை, அறிவுக்கூர்மை, எளிமை இவையெல்லாம் அவரைத் தனித்துவமிக்கவராகக் காண்பித்தன,” என்று சொன்னார். 

“இந்திய முஸ்லிம் சமூகம், பெண்கள், இளையர் எனப் பல்வேறு பிரிவுகளில் அவர் குறிப்பிடத்தக்க பங்களிப்பு வழங்கியுள்ளார். அவரது மறைவுச் செய்தி அவரது குடும்பத்தில் மட்டுமின்றி, சமூகத்திலும் உணரப்படும்,” என்றார் அவர்.

திருவாட்டி நஸ்ரத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த தமிழ் முரசு ஆசிரியர் திரு த. ராஜசேகர்,  தமிழ்ச் செய்தி மற்றும் நடப்பு விவகாரங்கள் தொடர்பான ஆலோசனைக் குழுவில் தாம் உறுப்பினராக இருந்தபோது திருவாட்டி நஸ்ரத்தும் உறுப்பினராக இருந்ததை நினைவுகூர்ந்தார்.

“2021 ஜூலை முதல் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை அக்குழுவிலிருந்தோம். அவர் ஊடகத் துறை சார்ந்தவராக இருந்தாலும், கல்வி அமைச்சு உள்ளிட்ட அரசாங்கப் பிரிவுகளில் பணியாற்றியுள்ளதால், தேர்ந்த ஆலோசனை வழங்குவதில் வல்லவர். குறிப்பாக ஆய்வுகளைக் கட்டமைப்பது, மக்களை எவ்வாறு சென்றடைவது குறித்த பார்வைகளை மிகச் சரியாகக் கணிக்கும் வல்லுநர்,” என்று புகழஞ்சலி செலுத்தினார் திரு ராஜசேகர்.

திருவாட்டி நஸ்ரத்தின் மறைவு நம்பமுடியாத இழப்பு என்று கூறினார் மூத்த செய்தியாசிரியர் திரு சபா. முத்து நடராஜன்.

மீடியாகார்ப்பில் நஸ்ரத்துடன் பணிபுரிந்த அனுபவம் குறித்துப் பகிர்ந்துகொண்ட திரு சபா. முத்து நடராஜன், “நஸ்ரத் அறிவாளி. அவர் மனங்கசந்து யாரிடமும் பேசிப்பார்த்ததில்லை. எல்லோருக்கும் உதவக்கூடிய நல்லுள்ளம் படைத்தவர். சமூகத்தின் மீதும், குறிப்பாகத் தமிழ் மொழி மீதும் அவர் பேரார்வம் கொண்டிருந்தார்,” என்று கூறினார். 

குடும்பத்தினருடன் எப்படி நேசத்துடன் நடந்துகொண்டாரோ, அதுபோலவே உடன்பணிபுரிந்தவர்களுடனும் பரிவுடன் பழகிய பண்பாளர் என்று சொன்ன திரு சபா. முத்து நடராஜன், “ஒளிபரப்புத் துறையில் பல்வேறு பிரிவுகளில் திறம்படச் செயல்பட்டு அதிவேக முன்னேற்றமடைந்த அவர், இவ்வளவு விரைவாக இவ்வுலகைவிட்டுக் கடந்து செல்வார் என்பதைக் கனவிலும் நினைக்கவில்லை,” என்று தெரிவித்தார்.

மறைந்த திருவாட்டி நஸ்ரத்தின் நல்லுடல் வியாழக்கிழமை (அக்டோபர் 17) அடக்கம் செய்யப்பட்டது.

குறிப்புச் சொற்கள்