மலேசியாவின் கோலாலம்பூரில் ஆசியான் கூட்டமைப்பின் 47ஆவது உச்சநிலை மாநாடு அக்டோபர் 26 முதல் 28 வரை நடைபெற்று வருகிறது. அதில் கலந்துகொண்டுள்ள சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், திங்கட்கிழமை (அக்டோபர் 27) தாய்லாந்துப் பிரதமர் அனுடின் சார்ன்விரகுலை சந்தித்தார். அவர்கள் தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய இருநாட்டுப் பேச்சுவார்த்தைகளை மாநாட்டுக்கு இடையே நடத்தியுள்ளனர்.
தாய்லாந்தின் முன்னாள் அரசியாரான சிரிகிட் கிட்டியகாராவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தாய்லாந்துப் பிரதமரிடம் தெரிவித்துக்கொண்டதாகப் பிரதமர் லாரன்ஸ் தமது சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆழமான, நெடுநாள் நட்பினைக் கொண்டுள்ள இரு நாடுகளும் பல துறைகளில் பங்காளிகளாகச் செயல்படுகின்றன. ஒற்றுமையை மேம்படுத்தி, குறிப்பாக புதிய துறைகளில் எதிர்காலத்தில் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான சாத்தியங்களை இருதலைவர்களும் ஆராய்ந்தனர்.
மேலும் பல இருநாட்டுப் பேச்சுவார்த்தைகளுக்குத் திட்டமிடப்படுவதாகவும் அறியப்படுகிறது.
“நம்பிக்கை, நன்மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எங்களது இரு நாடுகளும் 60 ஆண்டுகளுக்கும் மேலாக நல்லுறவைப் பகிர்ந்துவருகின்றன. பலதுறைகள் சார்ந்த பண்பட்ட எங்களது உறவு மின்னிலக்க நிதி, கரிம ஊக்கப்புள்ளி ஒத்துழைப்பு போன்றவற்றை உள்ளடக்கியதாகும்,” என்றார் பிரதமர் வோங்.
இருநாடுகளும் மேலும் பல புதிய துறைகளில் இணைந்து செயலாற்ற வாய்ப்புகள் உள்ளதை இரு தலைவர்களும் ஒத்துக்கொண்டுள்ளனர் என்று பிரதமர் வோங் கூறினார்.
தாய்லாந்துப் பிரதமர் முதன்முறையாகச் சிங்கப்பூர் வரும்போது பேச்சுவார்த்தைகள் தொடரும் எனவும் பிரதமர் லாரன்ஸ் வோங் குறிப்பிட்டார்.

