நான்கு வயதுச் சிறுமி மேகன் கங் துன்புறுத்தப்பட்ட வழக்கில் மூன்றாவது நபர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.
மேகனின் தாயார் ஃபூ லி பிங், அவரது காதலன் வோங் ஷி சியாங் ஆகியோருடன் அவர்களின் வாடகை கூட்டுரிமை வீட்டில் போதைப்பொருள் உட்கொண்ட நொவெல் சுவா ருவோஷி, சிறுமி கொடுமைப்படுத்தப்பட்ட சில சம்பவங்களைத் தனது கைபேசியில் பதிவு செய்திருந்தார்.
பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள சுவா, குழந்தையின் உடலை அப்புறப்படுத்தியது, மெத்தம்ஃபெட்டமின் போதைப்பொருளை உட்கொண்டது, மேகனை மேல்மாடத்தில் தூங்க வற்புறுத்தியது, ஆடை அணிய விடாமல் தடுத்தது, வோங் தாக்கிய பிறகு மேகனுக்கு மருத்துவ உதவி பெற்றுத் தராமல் புறக்கணித்தது போன்றவற்றின் தொடர்பில் ஃபூவுடனும் வோங்குடனும் சதித்திட்டம் தீட்டியது ஆகிய குற்றங்களைத் திங்கட்கிழமை (அக்டோபர் 26) நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
தன் தாயாராலும் தாயாரின் காதலனாலும் ஓராண்டுக்கும் மேலாக உடல், மனரீதியான துன்புறுத்தல்களை அனுபவித்த மேகன் கங், 2020ஆம் ஆண்டில் உயிரிழந்தார். அப்போது அவருக்கு நான்கு வயது.
மேகனின் உடல் ஒரு கார் பணிமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, ஓர் உலோகப் பீப்பாயில் வைத்து எரிக்கப்பட்டது.
