சிங்கப்பூர்ச் சிறுவர் சங்கம் விளக்கம்

மேகன் குங் மரணம்: ஒட்டுமொத்த கட்டமைப்பின் சரியற்ற செயல்பாடே காரணம்

2 mins read
a77caa22-6474-4d66-8236-aec86cafc070
துன்புறுத்தலுக்கு ஆளாகி கொல்லப்பட்ட மேகன் குங். - கோப்புப் படம்: ‌ஷின் மின்

நான்கு வயதுச் சிறுமி மேகன் குங் துன்புறுத்தலுக்கு ஆளாகி கொல்லப்பட்டதற்கு சிறார், குழந்தைகளுக்கான ஒட்டுமொத்த கட்டமைப்பும் சரியாகச் செயல்படாததே காரணம் என்று சிங்கப்பூர்ச் சிறுவர் சங்கம் புதன்கிழமை (ஏப்ரல் 9) கூறியது.

மேகனுக்கு ஏற்பட்ட காயங்கள் எவ்வளவு மோசனமாவை என்பதை சமூக சேவை அமைப்பான ‘பியாண்ட் சோ‌ஷியல் சர்விசஸ்’ (பிஎஸ்எஸ்) அமைப்பின் அறிக்கை தெரிவிக்கவில்லை என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு செவ்வாய்க்கிழமை (ஏ‌ப்ரல் 8) குறிப்பிட்டது. அதனால் மேகன் உயிரிழப்பதற்கு முன்பு அவருக்குச் சரியான உதவி வழங்கப்படவில்லை என்று அமைச்சு சுட்டியது.

கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மேகன் உயிரிழந்தார். தாயார் பூ லி பிங், 29, அப்போது அவரின் காதலரான வோங் ‌ஷி சியாங், 38, இருவரும் பல மாதங்களாக மேகனைத் துன்புறுத்தினர். இறுதியில் காதலர் ‌ஷி சியாங் கையால் குத்திய பிறகு மேகன் உயிரிழந்தார்.

மேகன் பயின்ற ‘ஹெல்த்தி ஸ்டார்ட் சைல்ட் டிவெலப்மென்ட் சென்டர்’ (Healthy Start Child Development Centre) மழலையர் பள்ளியை பிஎஸ்எஸ் அமைப்பு நடத்துகிறது.

அப்பள்ளியின் ஊழியர் ஒருவர், 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் மேகனின் உடலில் இருந்த காயங்களைக் கண்டிருக்கிறார். அந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மேகன் பள்ளியிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டார்.

பின்னர் 2020ஆம் ஆண்டு பிப்ரவரியில் அவர் கொல்லப்பட்டார். ஆனால், அதற்கு ஐந்து மாதங்களுக்குப் பிறகுதான் மேகன் உயிரிழந்தது தெரியவந்தது.

மேகனுக்கு இழைக்கப்பட்ட துன்புறுத்தலை அடையாளம் காண்பதில் குறைபாடுகள் இருந்திருந்தாலும் துன்புறுத்தல் தொடங்கியபோதே மேகனின் உடலில் இருந்த அறிகுறிகளை அவரின் ஆசிரியர்கள் விரைவில் அடையாளம் கண்டுவிட்டனர் என்று அவரின் மழலையர் பள்ளி புதன்கிழமை அறிக்கையில் குறிப்பிட்டது. பள்ளியும் அதை நடத்தும் அமைப்பும் மேகன் குறித்த கவலைகளைப் பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு, பிள்ளைப் பாதுகாப்பு நிபுணத்துவ நிலையம் போன்ற சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் தெரியப்படுத்தி ஆலோசனை பெற பலமுறை முயற்சி செய்திருக்கின்றன.

“வருத்தத்துக்குரிய மேகனின் மரணத்துக்கு அந்தக் காலகட்டத்தில் ஒட்டுமொத்த கட்டமைப்பும் சரியாகச் செயல்படாததே காரணம்,” என்று பிஎஸ்எஸ் தெரிவித்தது.

வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க பிஎஸ்எஸ் சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. எல்லா மழலையர் பள்ளி ஆசிரியர்களும் நிர்வாகத்தினரும் சிறார் பாதுகாப்பு தொடர்பில் அடிப்படைப் பயிற்சி பெறுவது பரிந்துரைகளில் அடங்கும்.

மேலும், சிறார் பாதுகாப்பு அதிகாரிகளை நியமிக்குமாறு பிஎஸ்எஸ், பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பைக் கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்