பிறர் நலன் காக்கத் துணிவுடன் செயலாற்றிய பொதுமக்கள் இருவருக்கு பொது உணர்வு விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
செப்டம்பர் 18ஆம் தேதி மாலை நடந்த இவ்விழாவில் உட்லண்ட்ஸ காவல் பிரிவு, திரு சுவா லீ கூன், 49, திரு சரிதே வெங்கட காசி விஸ்வநாத், 37, ஆகியோருக்கு ‘பொது உணர்வு விருது’ வழங்கி கௌரவித்தது.
ஈசூன் ரிங் ரோட்டில் அமைந்துள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) குடியிருப்புச் சுவரின் விளிம்பில் அமர்ந்தபடி காணப்பட்ட முதியவர் ஒருவரை துரிதமாகச் செயல்பட்டு பாதுகாப்பாக மீட்கக் காவல்துறைக்கு உதவியதற்காக இவ்விருது வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி செல்லப்பிராணிகள் சேவை தொடர்பான பணியை மேற்கொள்ள வாடிக்கையாளர் ஒருவர் இல்லத்திற்குச் சென்றார் திரு சுவா. அப்போது ஈசூன் ரிங் ரோட்டில் அமைந்துள்ள வீவக குடியிருப்பின் 10வது தளத்தின் சுவர் விளிம்பில் முதியவர் ஒருவர் நின்றிருந்ததைக் கண்டார் அவர்.
“முதியவர் புளோக் 109ல் பத்தாவது தளத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றின் சன்னல் சுவரின் விளிம்பில் ஏறத்தாழ கீழே குதிக்கும் நிலையில் நின்றவாறு காணப்பட்டார். அவரைக் கண்டவுடன் பாதுகாப்பான பகுதிக்கு இறங்கி வருமாறு உரக்கச் சத்தமிட்டேன். அதற்கு, “இங்கிருந்து போ” என்று சொன்ன முதியவர் சோகமான முகத்துடன் நின்றிருந்தார்,” என்று தமிழ் முரசிடம் கூறினார் திரு சுவா.
முதியவர் இறங்கிவர மறுத்துவிட்டாலும், உடனடியாகக் காவல்துறையைத் தொடர்புகொண்டார் திரு சுவா. அந்த முதியவரை எப்படியாவது காப்பாற்றியாக வேண்டும் என்ற முனைப்புடன் அங்கிருந்த அண்டைவீட்டாரின் கதவைத் தட்டி உதவியும் கேட்டார் திரு சுவா.
இவர் எழுப்பிய கூக்குரல் அங்கு இல்லத்தில் அமர்ந்திருந்த திரு காசியின் செவிகளில் விழ, அவர் வெளியே வந்தார். “ஆரம்பத்தில் தெளிவற்ற நிலையில் நின்றவாறு காணப்பட்ட முதியவர் பிறகு குறுகலான விளிம்பில் அமர்ந்துகொண்டார்,” என்று திரு சுவா கூறினார்.
“காவல்துறையினர் வருவதற்கு முன்னர் ஒருவேளை முதியவருக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் என்ன செய்வது? அவரைக் காப்பாற்ற முடியாத உணர்வு காலமெல்லாம் வருத்துமே,” என்று எண்ணித் தாமதிக்காமல் செயல்பட்டதாகக் கூறினார் திரு காசி.
தொடர்புடைய செய்திகள்
“அன்றைய தினம் குறிப்பிட்ட அந்த புளோக்கின் மின்தூக்கியில் பராமரிப்புப் பணிகள் நடந்துகொண்டிருந்தன. அதனால் மாடிப்படிகளில் ஏறி பத்தாவது மாடிக்கு விரைந்தேன்,” என்றார் அவர்.
“ஒவ்வொரு படியையும் ஏறியபோது, அவருக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாது என்ற பதைபதைப்பில் மின்னல்வேகத்தில் ஓடினேன். அவ்வளவு படிகள் எப்படி ஏறினேன் என்று தெரியவில்லை. முதியவரின் உயிரைக் காக்கவேண்டும் என்ற ஒரே நோக்கம்,” என அன்று நடந்த சம்பவங்களை விவரித்தார் திரு காசி.
காவல்துறையினர் வரும்வரை முதியவரிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருந்ததாகச் சொன்ன திரு காசி, சில நிமிடங்களில் காவல்துறையினர் அங்கு வந்துசேர்ந்ததும் அவர்களுடன் இணைந்து திரு சுவா, அங்கிருந்த ஒரு வெளிநாட்டு ஊழியர் உள்ளிட்டோர் பாதுகாப்பாக முதியவரை மீட்டதாகவும் சொன்னார்.
விருது பெற்றது குறித்து கருத்துரைத்த திரு சுவா, “இது நான் பெற்றுள்ள முதல் விருது. தேவையில் இருப்போரைத் தவிர்த்துவிடாமல் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் எனும் ஆர்வத்தை இவ்விருது எனக்குள் ஏற்படுத்தும்,” என்று கூறினார்..
“இவ்விருது பெற்றது விவரிக்க முடியாத ஆனந்தம். இதற்கு முன்பு நான் அந்த முதியவரைப் பார்த்ததில்லை என்றாலும் எந்த ஆபத்தும் ஏற்படாமல் அவரைப் பாதுகாத்திட வேண்டும் என்ற எண்ணம் காவல்துறையின் துரித நடவடிக்கையால் கைகூடியது,” என்றார் திரு காசி.
திரு சுவாவிற்கும் திரு காசிக்கும் விருது வழங்கிச் சிறப்பித்த காவல்துறை உதவி ஆணையர் ஆங் எங் செங், “இவர்களின் தன்னலமற்ற பொதுநலன்மிக்க உணர்வு மிகவும் பாராட்டுக்குரியது. காவல்துறைக்கு எப்படிப் பொதுமக்கள் உதவலாம் என்பதற்கு அவர்களின் செயல் சிறந்த முன்னுதாரணம்,” என்று கூறினார்.

