சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி, அதன் இளையர் லீக் பிரிவு (Communist Youth League) ஆகியவற்றைச் சேர்ந்ததாக நம்பப்படும் பிரிவு ஒன்று, லிங்க்ட்இன் (LinkedIn) தளத்தில் வேலை வாய்ப்புகளை விளம்பரப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதன் தொடர்பில் சிங்கப்பூர் உள்துறை அமைச்சு விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தைப் பற்றி தாங்கள் அறிவதாகவும் காவல்துறையிடம் புகார்கள் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் உள்துறை அமைச்சு செவ்வாய்க்கிழமையன்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது.
சீனாவின் கம்யூனிஸ்ட் இளையர் லீக் பிரிவு என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட லிங்க்ட்இன் கணக்கு, இம்மாதம் 20ஆம் தேதியன்று அத்தளத்தில் இரண்டு வேலை வாய்ப்புகளை விளம்பரப்படுத்தியது. கம்யூனிஸ்ட் இளையர் லீக், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் இளையர்களுக்கான பிரிவாகும்.
கம்யூனிஸ்ட் இளையர் லீக்கின் நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியின் பிரிவுக்கான கட்சி கிளைச் செயலாளர், இணை கிளைச் செயலாளர் (branch secretary, deputy branch secretary) ஆகிய பொறுப்புகளுக்கு ஊழியர்களை நியமிப்பதற்காக விளம்பரம் செய்யப்பட்டது என்று லிங்க்ட்இன் பதிவுகளில் குறிப்பிடப்பட்டது. அப்பதிவுகளும் அவற்றை வெளியிட்ட கணக்கும் இப்போது அகற்றப்பட்டுவிட்டன.
பிற நாட்டு அரசியலை சிங்கப்பூருக்குள் கொண்டு வருவதை இந்நாட்டு அரசாங்கம் சகித்துக்கொள்ளாது என்று உள்துறை அமைச்சு எச்சரித்துள்ளது.
கல்வி நிலையம் என்ற பொறுப்பில் தாங்கள் எந்த அரசியல் கட்சியுடனும் சம்பந்தப்படுத்திக்கொள்ளவில்லை என்று நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி பேச்சாளர் ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட வேலை வாய்ப்புப் பதிவுகளை அகற்றுமாறு நீ ஆன், லிங்க்ட்இன்னிடம் கேட்டுக்கொண்டதாகவும் அவர் குறிப்பிடடார்.

