மத்திய கிழக்குப் போர்: ஆசியாவின் அணுசக்தி இலட்சியங்களை ஊக்குவிக்கக்கூடும்

மத்திய கிழக்குப் போர்: ஆசியாவின் அணுசக்தி இலட்சியங்களை ஊக்குவிக்கக்கூடும்

2 mins read
4d254117-fabd-479f-8e05-1eabe8aeac35
அணுசக்திக்கான அடிப்படைக் காரணத்தை மத்திய கிழக்குப் போர் மேலும் வலுப்படுத்தி, துரிதப்படுத்தியிருந்தாலும், இத்தகைய உத்தியானது நீண்டகால அர்ப்பணிப்பு மற்றும் உறுதியைப் பொறுத்தே அமையும் என்று அவர் கூறினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

எரிபொருள், எரிவாயு மீதான சார்புநிலையை முடிவுக்குக் கொண்டுவர தென்கிழக்கு ஆசியா முற்படுகிறது. அணுசக்தியைப் பயன்படுத்துவதற்கான அதன் திட்டங்களை மத்திய கிழக்குப் போர் துரிதப்படுத்தக்கூடும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் நிபுணர்கள் தெரிவித்தனர்.

உலகளாவிய எரிபொருள் வர்த்தகத்தில் 20 விழுக்காட்டுக்குக் காரணமான முக்கிய கப்பல் போக்குவரத்து வழியான ஹோர்முஸ் நீரிணையின் மூடல், இறக்குமதி செய்யப்படும் எரிபொருள் மற்றும் எரிவாயு மீதான தென்கிழக்காசிய நாடுகளின் அதிக சார்புநிலையை வெளிப்படுத்தியுள்ளது. இதனால் நிலையற்ற எரிபொருள் விலை, பொருளியல் இடையூறுகள் மற்றும் எரிசக்தி அமைப்புகள் மீதான அழுத்தம் ஆகியவற்றுக்கு இவ்வட்டாரம் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

தென்கிழக்காசிய நாடுகளில் எரிசக்திப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கு, எரிசக்தி ஆதாரங்களை பன்முகப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்றும் இதன் மூலம் அணுசக்திக்கான தேவையும் வலுப்பெற்றுள்ளது என்றும் நிபுணர்கள் கூறினர்.

இது பேரளவிற்கு மத்திய கிழக்கின் எரிபொருள் மற்றும் எரிவாயுவையே நம்பியிருக்கும் தென்கிழக்கு ஆசியாவிற்குப் பெரிதும் பொருந்தும் என்று சிட்டிபேங்கின் சந்தை உத்தி நிபுணர் ஆர்கடி கெவோர்கியன் கூறினார்.

எரிபொருள், எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்ட தடங்கல்கள் மின் உற்பத்திச் செலவுகளை உயர்த்தியுள்ளதோடு, அடிப்படைச் சுமை மின்சாரத்தின் விலையையும் அதிகரித்துள்ளன. இதனால் பாதுகாப்பான மின் உற்பத்திக்கான ஒரு கவர்ச்சிகரமான மாற்றுத் தேர்வாக அணுசக்தி மாறியுள்ளது என்று அவர் கூறினார். அடிப்படைச் சுமை மின்சாரம் என்பது எந்தவொரு நேரத்திலும் ஒரு மின்கட்டமைப்புக்கு தேவைப்படும் குறைந்தபட்ச மின்சார அளவாகும்.

மத்திய கிழக்குப் போர் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மீதான ஆர்வத்தையும் புதுப்பித்துள்ளது. ஆனால், சூரிய ஒளி மற்றும் காற்று போன்ற ஆதாரங்கள் வானிலையைச் சார்ந்தவை என்பதால் எரிசக்தி உற்பத்தி சீரற்றதாக இருக்கலாம்.

அதிகரித்துவரும் மின்சாரத் தேவை, கரிம வெளியேற்றத்தைக் குறைக்க வேண்டியதன் அவசியம், நிலப்பற்றாக்குறை மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களின் சீரற்ற தன்மை ஆகியவற்றின் காரணமாகப் போருக்கு முன்பே அணுசக்தி மீதான ஆர்வம் வளர்ந்து வந்தது என்று சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் லீ குவான் யூ பொதுக் கொள்கைப் பள்ளியின் பேராசிரியரான டாக்டர் டான் சூ ஜீ ஷெங் சுட்டிக்காட்டினார்.

அணுசக்திக்கான அடிப்படைக் காரணத்தை மத்திய கிழக்குப் போர் மேலும் வலுப்படுத்தி, துரிதப்படுத்தியிருந்தாலும், இத்தகைய உத்தியானது நீண்டகால அர்ப்பணிப்பு மற்றும் உறுதியைப் பொறுத்தே அமையும் என்று அவர் கூறினார்.

அணுசக்தித் திட்டங்களை கிடப்பில் போட்டிருந்த நாடுகள், இப்போது அவற்றை முன்னெடுத்துச் செல்வது குறித்து தீவிரமாகப் பரிசீலிக்கலாம்.

“இறக்குமதி செய்யப்படும் புதைபடிவ எரிபொருள்கள் மற்றும் புவிசார் அரசியல் அபாயங்களால் தென்கிழக்கு ஆசிய நாடுகள் எந்தளவுக்குப் பாதிப்படையக்கூடிய நிலையில் உள்ளது என்பதை எடுத்துக்காட்டுவதன் மூலம், எரிசக்திப் பாதுகாப்பு குறித்த வாதத்தை இந்த மோதல் மேலும் கூர்மையாக்கியுள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்