அங் மோ கியோவில் முதியவர் ஒருவர் மெதுவாக சாலையைக் கடக்க உதவிய வெளிநாட்டு ஊழியர்க்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
வழிப்போக்கர் ஒருவர் இதுகுறித்த காணொளியை ‘எஸ்ஜிஃபாலோஸ்ஆல்’ எனும் இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்தார்.
“முதியவர் ஒருவர் சாலையைக் கடப்பதைக் கண்டதும், கனிவுமிக்க ஊழியர் ஒருவர் விரைந்து சென்று, அம்முதியவர் பாதுகாப்பாக சாலையைக் கடக்க உதவினார்,” என்று அப்பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடையர் சாலையைக் கடப்பதற்கான போக்குவரத்துச் சமிக்ஞை சிவப்பு விளக்கில் ஒளிர்ந்தபோதும், அந்த ஊழியர் கைத்தடி உதவியுடன் நடமாடும் அம்முதியவருடன் சென்று சாலையின் எதிர்ப்புறம் விடுவதை அக்காணொளி காட்டுகின்றது.
அம்முதியவர், அந்த ஊழியரின் தோளைப் பிடித்தபடி சாலையைக் கடப்பது காணொளியில் தெரிகிறது.
அந்த வெளிநாட்டு ஊழியரின் தன்னலமற்ற செய்கையை இணையவாசிகள் பலரும் பாராட்டி வருகின்றனர். சிங்கப்பூர் கனிவன்பு இயக்கமும் அக்காணொளியைத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
அண்மையில், வெளிநாட்டு ஊழியர் இருவர் நான்கு மணி நேரம் செலவிட்டு, கூடைப்பந்துத் திடலில் தாங்கள் தொலைத்த வயலினையும் கைப்பேசியையும் கண்டுபிடிக்க தாய்-மகளுக்கு உதவியது குறிப்பிடத்தக்கது.
“முன்பின் அறிமுகமில்லாதபோதும் அந்தக் கட்டுமான ஊழியர்கள் எங்களுக்குக் கைகொடுத்தனர். அந்தக் கனிவுமிக்க ஊழியர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்,” என்று ஸாங் என்று அழைக்கப்படும் அந்தத் தாயார், சீன நாளிதழான லியான்ஹ சாவ்பாவிடம் கூறியிருந்தார்.

