‘ஸ்ட்ராவா’ போன்ற உடற்பயிற்சி செயலியால் ராணுவத் தளங்களுக்கு அபாயம்: நிபுணர்கள்

‘ஸ்ட்ராவா’ போன்ற உடற்பயிற்சி செயலியால் ராணுவத் தளங்களுக்கு அபாயம்: நிபுணர்கள்

2 mins read
703b2690-4f3f-413b-81fc-9c71c6307a07
சிங்கப்பூரின் ராணுவத் தளங்களில் உள்ள பாதைகளை ‘ஸ்ட்ராவா’ செயலியில் காண முடிகிறது. - படம்: பெஞ்சமின் சூன்

ஸ்ட்ராவா (Strava) போன்ற உடற்பயிற்சிகளைக் கண்காணிக்கும் செயலிகள், சிங்கப்பூர் ராணுவத் தளங்களுக்கு அபாயமாகக்கூடும் என்று கவனிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர்.

அத்தகைய செயலிகள் தனிநபர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்காவிட்டாலும் ஒருவர் அன்றாடம் செய்யும் வேலைகளையும் அவரின் பழக்கங்களையும் கண்காணிக்கிறது என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

வெளிநாடுகளில் ஏற்பட்ட அத்துமீறல்களை முன்னிட்டு ஸ்ட்ராவா போன்ற செயலிகள் அதிகமாகக் கண்காணிக்கப்படுகின்றன.

கடந்த மாதம், வானூர்திகளைச் சுமந்து செல்லும் பிரெஞ்சு கப்பல் இருந்த இடம் துல்லியமாக வெளியரங்கமானது. கப்பலில் இருந்த அதிகாரி ஒருவர் ஸ்ட்ராவா செயலியைப் பயன்படுத்தத் தொடங்கியபோது கப்பல் இருந்த இடம் அம்பலமானதாகத் தெரிகிறது.

இம்மாதத் தொடக்கத்தில் பிரிட்டனின் ஆக ரகசியமான அணுவாயுதத் தளங்களில் பிரிட்டி‌ஷ் ராணுவ வீரர்கள் இருந்தது வெளிப்படையாகத் தெரியவந்தது. அந்த வீரர்கள் ஸ்ட்ராவா செயலியில் தாங்கள் மேற்கொண்ட உடற்பயிற்சி குறித்து பதிவுசெய்திருந்தனர்.

ஸ்ட்ராவாவின் அனைத்துலக வரைபடத்தில் சுங்காய் கெடோங் முகாம், சாங்கி நேவல் தளம், செம்பவாங் ஆகாயப் படைத் தளம் ஆகிய ராணுவத் தளங்களில் உள்ள பாதைகள் ஸ்ட்ராவா செயலியில் தென்படுவதைக் காண முடிகிறது.

சிங்கப்பூரைப் பொறுத்தவரை இடங்கள் குறித்த தகவல்கள் தெரியவருவதால் அபாயம் இல்லை. மாறாக, அந்தத் தளங்கள் நடைபெறும் வழக்கமான நடவடிக்கைகளும் பழக்கவழக்கங்களும் வெளியரங்கமாவதுதான் அபாயம் என்றார் சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் அனைத்துலகப் பாதுகாப்பு, உத்திப் பிரிவின் தலைவர் இணைப் பேராசிரியர் ரஸ்வானா பேகம்.

ஸ்ட்ராவா போன்ற செயலிகளால் ஏற்படக்கூடிய அபாயம் பற்றி அறிந்திருப்பதாகக் கூறிய தற்காப்பு அமைச்சு, தேவை ஏற்படும்போது தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்று சொன்னது.

உடற்பயிற்சியைக் கண்காணிக்கும் கருவிகள் தொழில்நுட்பம் மூலம் இன்னும் விரைவாக வளர்ச்சியடைவதை அறிந்திருப்பதாக அமைச்சும் சிங்கப்பூர் ஆயுதப் படையும் தெரிவித்தன.

குறிப்புச் சொற்கள்