போர்த் தொழில்நுட்பம்: வானில் கணிப்பு, தரையிலிருந்து இணைப்பு

போர்த் தொழில்நுட்பம்: வானில் கணிப்பு, தரையிலிருந்து இணைப்பு

1 of 8
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

29 Oct 2026 - 6:30 am

3 mins read

போர்க்களத்தில் ராணுவ விமானங்களையும் ஹெலிகாப்டர்களையும் இயக்குவது, வழக்கமான வான்வழிப் பயணங்களைக் காட்டிலும் சவாலானது. மலைகள் எங்கு உள்ளன, எதிரிகள் எங்குப் பதுங்கியிருக்கிறார்கள், வானிலை எப்படி இருக்கிறது என்பதை எல்லாம் மிகக் குறைந்த நேரத்தில் கவனித்துப் படை வீரர்கள் தகுந்த முறையில் செயல்படவேண்டும்.  

முன்பெல்லாம் படை வீரர்கள் காகித வரைபடங்களை மேசையில் விரித்து வைத்துப் பாதைகளைத் திட்டமிட்டனர். ‘வாக்கி டாக்கி’ கருவி வழியாகப் பேசி இலக்குகளைத் தாக்கினர். அந்த நடைமுறையில் அதிக நேரம் வீணானதுடன், தவறுகள் நடக்கவும் வாய்ப்பு இருந்தது.  

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் ‘வாலபி 2026’ (Exercise Wallaby 2026) பயிற்சியில், சிங்கப்பூர்க் குடியரசு ஆகாயப்படை இரண்டு புதிய தொழில்நுட்பங்களைச் சோதித்துப் பார்க்கிறது.  

1. ஹெலி டிஎஸ்எஸ் (Heli DSS): பாதையைக் காட்டும் கணினிச் செயலி

எதிரிகளின் ‘ரேடார்’ கருவிகளின் கண்காணிப்பிலிருந்து தப்பிக்க, ஹெலிகாப்டர்கள் மலைகளுக்குப் பின்னால் மிகவும் தாழ்வாகப் பறக்க வேண்டும்.  

செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் ‘ஹெலி டிஎஸ்எஸ்’ (Heli DSS) மென்பொருளை உருவாக்க, ஆகாயப்படை வீரர்கள் ‘ரெய்ட்’ (RSAF Agile Innovation Digital - RAiD) உருவாக்குநர்களுடன் கைகோத்தனர். 

இவர்கள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி இதன் உருவாக்கத்தை விரைவுபடுத்தியதுடன், கள வீரர்களின் கருத்துகளின் அடிப்படையில் இதன் சிறப்பம்சங்களை உடனுக்குடன் மேம்படுத்தினர்.  

நிலப்பரப்பு, அச்சுறுத்தல்கள், பணிகளுக்கான தேவைகள் ஆகியவற்றை இச்செயலி உடனுக்குடன் அலசுகிறது. மலை மறைவுகளைப் பயன்படுத்தி எதிரிகளின் பார்வையில் படாத மாற்றுப் பாதைகள் பலவற்றை உருவாக்குகிறது. 

பின்னர் நேரம், எரிபொருள், பாதுகாப்பு, அச்சுறுத்தல் ஆகியவற்றைக் கணக்கிட்டு, மிகச் சிறந்த பாதையை விமானிகளுக்குப் பரிந்துரைக்கிறது.  

“இத்தகைய பாதையைத் திட்டமிடுவதற்கு வழக்கமாக ஏறக்குறைய இரண்டு மணி நேரம் ஆகிறது. இச்செயலி அதை ஏறக்குறைய 20 நிமிடங்களாகக் குறைக்கிறது,” என்று 127வது படைப்பிரிவின் தளபதி 38 வயது லெப்டினென்ட் கர்னல் சாய் வெய் ஜுன் கூறினார். 

“சதுரங்க ஆட்டப் பலகையின் கட்டங்களைப்போல நிலப்பரப்பை ஆராய்ந்து, ஆபத்து இல்லாத பாதையைக் கணினி கண்டறிந்து அதனைத் தெரிவு செய்கிறது. இதனால் வீரர்கள் தேவையற்ற கணக்கீடுகளில் நேரத்தை வீணடிக்காமல், முக்கிய முடிவுகளில் மட்டும் கவனம் செலுத்த முடிகிறது.

“சினூக் (CH-47F Chinook) ஹெலிகாப்டரில் இந்தக் கட்டமைப்பை இயக்கிவரும் விமானி 34 வயது மேஜர் டேனியல் சோ வெய் தோங், “ஹெலிகாப்டர் போக வேண்டிய பாதைக்கான அடிப்படைத் திட்டத்தை இந்தத் தொழில்நுட்பம் வகுத்துத் தருவதால் எங்கள் வேலைச்சுமை குறைகிறது. இதனால் திடீர் வானிலை மாற்றம் அல்லது அவசரகாலங்களில் என்ன செய்ய வேண்டும் என்பதில் எங்களால் நிம்மதியாகக் கவனம் செலுத்த முடிகிறது,” என்று கூறினார்.  

2. டாக்காஸ் (DACAS) – இலக்குகளை நொடியில் காட்டும் மின்னிலக்கச் செயலி

தரைப்படை வீரர்கள் முன்னேறிச் செல்லும்போது எதிரிகள் தடுத்தால், வானில் பறக்கும் அப்பாச்சி  போர் ஹெலிகாப்டர்களை உதவிக்கு அழைப்பார்கள்.  

முன்பெல்லாம் காலாட்படை வீரர்கள், எதிரி இருக்கும் இடத்தை வரைபடங்களின் அகலக்கோடுகள், நெடுங்கோடுகள் ஆகியவற்றின் எண்களை ‘வாக்கி டாக்கி’ கருவி வழி ஒருவரோடு ஒருவர் பகிர்வர்.  

இத்தகைய சூழலில் தொடர்பில் பிழை நேரும்போது சொந்த வீரர்கள்மீதே தவறுதலாகக் குண்டு விழும் அபாயமும் இருந்தது.  

இந்நிலைக்குத் தீர்வு காண்பதற்காகச் சிங்கப்பூர் ஆகாயப்படை, பாதுகாப்பு அறிவியல், தொழில்நுட்ப அமைப்பு  (DSTA) எஸ்டி இன்ஜினியரிங் மிஷன் மென்பொருள் சேவைகள் (ST Engineering Mission Software & Services - ST-MSS) ஆகியவை இணைந்து ‘டாக்காஸ்’ (DACAS) என்ற செயலியை உருவாக்கியுள்ளன.  

இதன் மூலம், எதிரியின் இருப்பிடங்கள், குறி வைக்கப்படும்  இடங்கள்  உள்ளிட்ட விவரங்களை உடனுக்குடன் பரிமாற முடியும். அந்த விவரங்கள் நேரடியாக அப்பாச்சி ஹெலிகாப்டர் விமானியின் கணினித் திரைக்குச் சென்றுவிடும்.  

இதனால், ‘வாக்கி டாக்கி’ கருவிவழி தொடர்புகொள்ளும் நேரம் வீணாவது தவிர்க்கப்பட்டு, 50 விழுக்காடு முதல் 80 விழுக்காடு வரை நேரம் மிச்சமாகிறது.  

இதனைப் பற்றி விவரித்த அப்பாச்சி ஹெலிகாப்டர் விமானி 27 வயது லெப்டினென்ட் டான் யாவ் பின், “வரைபட எண்களைக் கேட்டு எழுதும்போதுதான் தவறுகள் நடக்கும். இப்போது எண்கள் திரையிலேயே தெளிவாக வந்துவிடுவதால், குழப்பமின்றி உடனடியாகத் தாக்க முடிகிறது,” என்றார்.

குறிப்புச் சொற்கள்