சிங்கப்பூர் ஆயுதப்படைப் பயிற்சிக் கழகத்தில் திங்கட்கிழமை (அக்டோபர் 28) நடைபெற்ற கோ கெங் சுவீ ராணுவத் தலைமைத்துவப் பயிற்சிக் (Goh Keng Swee Command and Staff College) பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 268 அதிகாரிகள் பட்டம் பெற்றனர்.
சிங்கப்பூரில் ஆக உயரிய ராணுவப் பயிற்சி கல்வியான இது, தலைமைப் பதவிகளுக்கு அதிகாரிகளைத் தயார்ப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டது.
141 அதிகாரிகள், 56 தேசிய சேவை அதிகாரிகள், 46 ராணுவ நிபுணர்கள், சிங்கப்பூர் ஆயுதப்படையைச் சேர்ந்த 4 வாரண்ட் அதிகாரிகள், 1 சிங்கப்பூர் காவல்துறை அதிகாரி, 12 நாடுகளைச் சேர்ந்த 20 அனைத்துலக அதிகாரிகள் ஆகியோரின் சாதனைகளைக் கொண்டாடிய இப்பட்டமளிப்பு விழாவில் தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஹெங் சீ ஹாவ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
நிலையற்ற உலகப் பாதுகாப்புச் சூழலைப் பற்றியும் போர் நிலவரம் பற்றியும் தமது உரையில் பேசிய திரு ஹெங், ரஷ்யா, உக்ரேன், மத்திய கிழக்கு நாடுகள், சூடான், தென் சீனக் கடல் உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் பதற்றங்களை உதாரணங்களாகச் சுட்டிக்காட்டினார்.
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதன் வன்பொருளை நவீனமயமாக்குவதன் மூலம் கலப்பினப் போருக்குச் (hybrid warfare) சிங்கப்பூர் ஆயுதப்படை தன்னை தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை திரு ஹெங் வலியுறுத்தினார்.
வெற்றி பெறுவது நம் மக்கள், அவர்களின் தலைவர்களின் தரத்திலும் பண்புகளிலும் அடங்கியுள்ளது என்று கூறிய அவர், இலக்குகளைத் தவறவிடாமல் புதிய தொழில்நுட்பத்தைத் திறம்பட மாற்றியமைக்கக்கூடிய தலைவர்களின் பங்கையும் எடுத்துரைத்தார்.
பட்டதாரிகளில் ஒருவரான மேஜர் (தேசிய சேவை) டாக்டர் ரமேஷ் விஜயா, 43, கோ கெங் சுவீ ராணுவப் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்ற முதல் தேசிய சேவை மின்னற்படை அதிகாரிகளில் ஒருவராவார்.
சாங்கி பொது மருத்துவமனையில் அறுவை சிகிச்சைத் துறையில் மூத்த மருத்துவ ஆலோசகரும் இணைப் பேராசிரியருமான டாக்டர் ரமேஷ், தமது 10 ஆண்டு ராணுவ சுழற்சியை முடித்த பின், தமது பரபரப்பான மருத்துவப் பணிக்கு மத்தியில் போர்க்காலப் படை வீரரின் தன்னார்வ விரிவாக்க சேவையில் (ROVER) தமது தேசியக் கடமையைத் தொடர்ந்தார்.
தொடர்புடைய செய்திகள்
“1970ல் ஆரம்பகால தேசிய சேவை அதிகாரிகளில் ஒருவராக என் தந்தை பணியாற்றினார். அதனால் இளம் வயதிலிருந்தே, அவர் தேசிய சேவையின் முக்கியத்துவத்தையும் நாட்டின் தற்காப்புக்கான உறுதிப்பாட்டையும் எனக்குப் புரியவைத்தார்,” என்று டாக்டர் ரமேஷ் பகிர்ந்தார்.
தந்தையின் ஊக்கத்தால் 2000ல் மின்னற்படையில் சேர்ந்து தமது முழுநேர தேசிய சேவையை முடித்த பின்னர் அவர் மருத்துவப் பள்ளியில் சேர்ந்தார்.
“சமூகத்திற்குத் திருப்பித் தரும் சிறந்த குடிமக்களாக இருப்பது முக்கியம் என நம்புகிறேன். இது நமது கடமை என்பதையும் தாண்டி, சமூகத்திற்கு ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கடப்பாட்டையும் குறிக்கிறது,” என்றார் அவர்.
கடுமையான ராணுவப் பயிற்சி பாடத்திட்டத்துடன் தமது அறுவை சிகிச்சைப் பொறுப்புகளைச் சமாளிக்க தமது குடும்பம், சக மருத்துவமனை ஊழியர்கள், சக படைவீரர்கள், வகுப்பு தோழர்கள் முதலியோரின் ஆதரவு பேருதவியாக இருந்ததாக அவர் கூறினார்.
“படிப்பில் முழுநேரம் செலவிட வேண்டியிருந்தபோது, என் சக மருத்துவர்கள் என் நோயாளிகளைக் கவனித்துக்கொண்டனர். எனக்குக் கடமைகள் அதிகரித்தபோது என் சகோதரர் எங்கள் வயதான பெற்றோரைக் கவனித்துக்கொள்ள உதவினார்,” என்றார் டாக்டர் ரமேஷ்.
கோ கெங் சுவீ ராணுவப் பயிற்சிக் கல்லூரியில் பல்வேறு பின்னணிகளையும் கண்ணோட்டங்களையும் கொண்ட அதிகாரிகளிடமிருந்து கற்றுக்கொள்ள ஒரு தனித்துவமான வாய்ப்பு கிட்டியது என்றும் இதன்வழி பாதுகாப்பு, உத்திமுறை பாடம் பற்றிய புரிதல் மேம்படுத்தப்பட்டது என்றும் அவர் சொன்னார்.
ஒரே நேரத்தில் பல கடப்பாடுகளைச் சமாளிக்க முற்படும்போது, காலத்திற்கு முன்னதாகவே தயார்ப்படுத்துவது, நேரத்தை வகுப்பது, சுற்றியிருப்பவர்களின் ஆதரவு ஆகியவை இன்றியமையாதது என்று அவர் கூறினார்.
“சிங்கப்பூர் ஆயுதப்படையில் நீண்ட காலத்திற்கு எனது சிறப்பான பங்கை ஆற்ற விரும்புகிறேன்,” என்றார் டாக்டர் ரமேஷ்.

