சிங்கப்பூரில் உள்ள சில தாதிமை இல்லங்கள், துடிப்புடன் மூப்படையும் நிலையங்களுக்கு கடந்த சில மாதங்களாக வழக்கத்திற்கு மாறாக குட்டிக் குதிரைகள் வருகையளிக்கின்றன.
அமைதியான சாதுவான குணத்துக்குப் பெயர் போன குட்டிக் குதிரைகளைக் கொண்டு அங்குள்ள முதியோர்களின் மன மற்றும் உடல் நலனை மேம்படுத்தும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
‘ஹேடேஸ் வித் ஹார்சஸ்’ (Haydays with Horses) என்றழைக்கப்படும் அந்த ஈராண்டு முன்னோடித் திட்டம், செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 11) இக்குவல் என்ற அறப்பணி அமைப்பால் அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது.
லெங்கோக் பாருவில் உள்ள என்டியுசியின் சுகாதார, துடிப்புடன் மூப்படையும் நிலையத்தில் புதிய சிகிச்சை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. இது, இவ்வாண்டு செப்டம்பர் வரை செயல்படுத்தப்படும்.
“குதிரைகளை முதல் முறையாக அறிமுகப்படுத்தியபோது சற்று பதற்றமாக இருந்தது. அடுத்தடுத்த பயிலரங்கில் இக்குவலின் வழிகாட்டுதலுடன் பலவற்றைக் கற்றுக்கொண்டோம்,” என்றார் 77 வயது ரேமண்ட் சோங்.
குதிரைகளின் எண்ணத்தையும் அவர் புரிந்துகொண்டார்.
“நான் அமைதி அடைகிறேன். குதிரைகளுடன் பழகுவது மகிழ்ச்சியாக இருக்கிறது,” என்றும் அவர் தெரிவித்தார்.
‘ஹேடேஸ் வித் ஹார்சஸ்’ திட்டம், ஆறு என்டியுசி சுகாதார, தாதிமை இல்லங்களிலும் 22 துடிப்புடன் மூப்படையும் நிலையங்களிலும் உள்ள 800க்கும் மேற்பட்ட முதியோர்களுக்குப் பலனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய நிலையங்களில் முதியோர்கள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக சமூக பொழுதுபோக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
குட்டிக் குதிரைகளை இங்கு கொண்டு வருவது மட்டுமல்லாமல் அப்பர் தாம்சனில் உள்ள இக்குவலின் நிலையங்களில் பெரிய குதிரைகளை நேரில் காணவும் முதியோர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.