தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிறார் வளர்ச்சியில் சமூக, உணர்வுபூர்வ மேம்பாடு முக்கியம்: கல்வி அமைச்சர் சான்

2 mins read
e4429238-179c-4bcd-8306-857d605fdc5b
(இடமிருந்து) இளம்பருவ வளர்ச்சிக்கான தேசியக் கல்விக்கழகத்தின் (என்ஐஇசி) ஊழியர்கள், மாணவர்களுடன் கல்வி அமைச்சர் சான் சுன் சிங் மற்றும் ‘என்ஐஇசி’ இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான திருவாட்டி லோக் இயோ டெக் யோங். - படம்: என்ஐஇசி
multi-img1 of 2

சிறார்களின் கல்விக்கான முக்கிய அடித்தளம் சமூக, உணர்வுபூர்வ மேம்பாடு என்றும் வலுவான சமூக உணர்வு சார்ந்த மேம்பாடு இல்லையென்றால், எஞ்சியிருக்கும் கல்விப் பயணத்தைக் கட்டமைப்பது கடினமானதாக இருக்கக்கூடும் என்றும் தெரிவித்தார் கல்வி அமைச்சர் சான் சுன் சிங்.

அக்டோபர் 17ஆம் தேதியன்று துவங்கிய இளம்பருவ வளர்ச்சிக்கான தேசியக் கல்விக்கழகத்தின் (என்ஐஇசி) ஐந்தாவது வருடாந்தர மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அமைச்சர் சான், சிங்கப்பூரில் இளம்பருவக் கல்வியின் இன்றியமையாதப் பங்கு குறித்து உரையாற்றினார்.

“கல்வியைத் தாண்டி சிறார்களின் சமூக மற்றும் உணர்வு சார்ந்த நலனில் நாம் கவனம் செலுத்துவோம். சிங்கப்பூரில் பதின்மவயதினர் மற்றும் இளஞ்சிறார்கள் பலருக்கு இருக்கும் சமூக, உணர்வுபூர்வ சவால்களைக் கண்டறியுங்கள்.

“இதன் தொடர்பில் சிறார்களின் சமூக மற்றும் உணர்வு சார்ந்த அடித்தளங்களை வலுவாக்குவது குறித்து ‘என்ஐஇசி’ தீவிரமான ஆய்வுகளை மேற்கொள்ளும் என்று நம்புகிறேன்,” என்றார் அமைச்சர் சான்.

சிறார்களின் வேறுபட்ட தேவைகளைச் சந்திக்கும் வகையில் இளம்பருவ வளர்ச்சி சார்ந்த கல்வியாளர்கள் பல்வேறு தன்மையுடைய திறன்களைப் பெற்றிருப்பதும் அவசியம் என்று குறிப்பிட்டார் திரு சான்.

“நம் சிறார்களில் வெவ்வேறு மூளைச்செயல்திறன் உள்ளோர், சிறப்புத் தேவையுடையோர், பல்வேறு திறன்மிக்கவர்கள் இருக்கக்கூடும். ஒரே வரையளவு இந்தப் பல்வேறு அணுகுமுறைகளுக்கும் பொருந்தக்கூடியதாய் இருக்காது.

“இந்த வேற்றுமைத்தன்மையை அணுகுவதற்கு ஏற்ற வகையில் இத்துறை சார்ந்த வல்லுநர்கள் பலவிதத் திறன்கொண்டவர்களாக இருக்க வேண்டும்,” என்றார் அமைச்சர்.

இதன் அடிப்படையில் கல்வியாளர்கள் தொடர்ந்து உள்ளூர் மற்றும் அயல்நாட்டுப் பங்காளிகளுடன் இணைந்து பங்காற்றுவார்கள் என்று நம்புவதாகத் தெரிவித்த திரு சான், “பள்ளியும் வகுப்பறையும் நம் உலகமாக இருக்கக்கூடாது. உலகமே நம் வகுப்பறை,” என்றும் சுட்டினார்.

முன்னதாக நேற்றைய நிகழ்வில் நிறுவப்பட்ட ‘என்ஐஇசி’யின் தலைமைத்துவ உன்னதத்திற்கான நிலையம் குறித்துப் பாராட்டு தெரிவித்த அமைச்சர், சிறந்த பயிற்சிகளைச் சொந்தம்கொண்டாடும் இடமாக ‘என்ஐஇசி’ திகழவேண்டும் எனவும் இதனைச் செயல்படுத்திடவும், தலைவர்கள் உட்பட இதன் வல்லுநர்களை நாமே உருவாக்கிடவும் வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

பாலர் பருவக் கல்வியின் முக்கியத்துவம், புதிய முயற்சிகள் குறித்து தமிழ் முரசிடம் உரையாற்றிய ‘என்ஐஇசி’ விரிவுரையாளர் திருவாட்டி சுஜாதா பிரகதீஸ்வரன், “தொடர் கற்றல் தொடர்பான சூழலிற்கு வித்திடுவதும், உள்ளார்ந்த வளர்ச்சியை ஊக்குவிக்கவும் கல்விக் கழகம் விழைகிறது.

“நற்பண்புகளை வளர்த்தல், மின்னிலக்கத் தொழில்நுட்பம் சார்ந்த எதிர்காலத்திற்கு பிள்ளைகளை அர்த்தமுள்ள வகையில் தயார்ப்படுத்துதல், பாலர் குழந்தைகளின் தாய்மொழித் திறனை வலுப்படுத்தப் பாரம்பரிய விளையாட்டுகளை இணைக்கக்கூடிய புதுமையான பாடத்திட்டங்கள் ஆகியவற்றை உள்ளடக்கும் வகையில் புதிய திட்டங்கள் இருந்தால் சிறார்கள் ஒருங்கிணைந்த நன்மை அடைவார்கள்,” என்று தாம் கருதுவதாக அவர் சொன்னார்.

கல்வியாளர்கள், தலைவர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்ட 1000க்கும் அதிகமானோர் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். இந்த மாநாடு நிபுணத்துவப் பரிமாற்றத்திற்கு முக்கியமான தளம் என்றும் இந்நிகழ்வு இளம்பருவக் கல்வியாளர்களைக் கொண்டாடுகிறது என்றும் சொன்னார் ‘என்ஐஇசி’ இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திருவாட்டி லோக் இயோ டெக் யோங்.

குறிப்புச் சொற்கள்