தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

செம்பவாங் குழுத்தொகுதியில் இரு மசெக புதுமுகங்கள் அறிமுகம்

2 mins read
0f205f22-55c4-4090-b36d-4ae8fa8cd615
இவ்வாண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் செம்பவாங் குழுத்தொகுதியில் வேட்பாளர்களாகக் களமிறங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் புதுமுகங்களான திரு கேப்ரியல் லாமையும் (இடது) திரு இங் ஷி ஸூயானையும் (வலது) சுகாதார அமைச்சர் ஓங் யி காங் அறிமுகப்படுத்தினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இவ்வாண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் செம்பவாங் குழுத்தொகுதியில் வேட்பாளர்களாகக் களமிறங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் இரண்டு புதியவர்களை சுகாதார அமைச்சர் ஓங் யி காங் அறிமுகப்படுத்தினார்.

‘செம்பவாங் குழுத்தொகுதியின் புதிய தொண்டூழியர்கள்’ எனக் குறிப்பிட்டு அமைச்சர் ஓங் அறிமுகப்படுத்திய முதலாமவர் திரு கேப்ரியல் லாம், 42.

திரு கேப்ரியல் லாம் - ‘ஷாலோம் இன்டர்நேஷனல் மூவர்ஸ்’ நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி
திரு கேப்ரியல் லாம் - ‘ஷாலோம் இன்டர்நேஷனல் மூவர்ஸ்’ நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வீடு மாறுவதன் தொடர்பில் பொருள்களை இடமாற்ற உதவும் ‘ஷாலோம் இன்டர்நேஷனல் மூவர்ஸ்’ நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரியான திரு லாம், குடியிருப்பாளர்களின் வாழ்க்கையை வளப்படுத்த அமைச்சர் ஓங்கின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்த விரும்புவதாகக் கூறினார்.

தற்போது அப்பகுதியில் வசிப்பவராக இல்லாவிட்டாலும், அக்குழுத்தொகுதி உருவாக்கப்பட்ட 1989ஆம் ஆண்டில் தம் குடும்பம் செம்பவாங்கிற்குக் குடிபெயர்ந்தாகக் குறிப்பிட்ட திரு லாம், “இங்கு நான் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. செம்பவாங்கில் நான் மக்களின் வாழ்க்கையை முன்னேற்ற விரும்புகிறேன்,” என்றார்.

இவர் இதற்கு முன்பதாக தெம்பனிஸ் குழுத்தொகுதியில் காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் ஓங் அறிமுகப்படுத்திய மற்றொரு புதிய முகம் திரு இங் ஷி ஸூவான் (Ng Shi Xuan). இவர் மின்கல நிறுவனமான ‘பவர்மார்க் பேட்டரி அண்ட் ஹார்டுவேர்’ நிறுவனத்தின் இயக்குநர்.

திரு இங் ஷி ஸூவான். இவர் செம்பவாங்கில் மக்கள் செயல் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திரு இங் ஷி ஸூவான். இவர் செம்பவாங்கில் மக்கள் செயல் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இவரும் செம்பவாங்கில் மக்கள் செயல் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்விருவரையும் சனிக்கிழமை (மார்ச் 29) காலை நடைபெற்ற ‘ஓசிபிசி’ மூத்தோர் பராமரிப்பு சேவை தொடர்பான சமூக நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தினார் திரு ஓங்.

அதனைத் தொடர்ந்து, அங்குத் திரண்டிருந்த நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் பேசிய திரு இங், செம்பவாங் வட்டாரத்திற்காக ஏராளமான புதிய யோசனைகளைக் கொண்டிருப்பதாகவும், குடியிருப்பாளர்களைப் பற்றி அறிந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைவதாகவும் கூறினார்.

திரு இங் முன்னாள் அரசாங்க ஊழியர். பத்து ஆண்டுகளாக மெக்பர்சன் வட்டாரத்தில் அடித்தள தொண்டூழியராகவும் செயலாற்றியுள்ளார்.

“மேற்கூறிய பத்தாண்டுகளில், குடியிருப்பாளர்கள் அக்கறைகளுக்குச் செவிமடுக்கும் திறனைப் பெற்றுக்கொண்டேன். வரும் நாள்களில் குடியிருப்பாளர்கள் பலரைச் சந்திக்கவும் அவர்களைப் புரிந்துகொள்ளவும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் நம்புகிறேன்,” என்று குறிப்பிட்டார் திரு இங்.

செம்பவாங் குழுத்தொகுதியின் முக்கியத் தூணாகக் கருதப்படும் அமைச்சர் ஓங், “இவ்விருவரும் தொண்டூழியர் அணியில் இணைந்து சமூகத்திற்குப் பங்களிக்கக்கூடிய துடிப்பானவர்கள், ஆர்வமுள்ளவர்கள், மிகவும் நல்லவர்கள்,” எனக் குறிப்பிட்டார்.

வரவிருக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் ஐந்து பேர் கொண்ட குழுவில் ஒன்றுக்கும் மேற்பட்ட புதுமுகங்களை எதிர்பார்ப்பதாகத் திரு ஓங் மேலும் சொன்னார்.

திரு ஓங், திருவாட்டி போ லி சான், திரு விக்ரம் நாயர், திருவாட்டி மரியம் ஜாஃபர், டாக்டர் லிம் வீ கியாக் ஆகியோர் செம்பவாங் குழுத்தொகுதியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

கடந்த 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 67.29 விழுக்காட்டு வாக்குகளுடன் மக்கள் செயல் கட்சி அத்தொகுதியைக் கைப்பற்றியது.

குறிப்புச் சொற்கள்