தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெளிநாடுகளில் இஸ்லாமியக் கல்வி பயிலும் சிங்கப்பூரர்களுடன் அமைச்சர் மசகோஸ் சந்திப்பு

2 mins read
983ddf99-e54b-43da-a2c3-1b8debfaabe4
கெய்ரோவில் பயிலும் சிங்கப்பூரர்களுடன் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி. - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம் அங்குள்ள சிங்கப்பூரர்களைச் சந்திக்க முயல்வதாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் குறிப்பிட்டார்.

இந்தச் சந்திப்புகள், பழைய நண்பர்களுடன் மீண்டும் இணைப்பை ஏற்படுத்திக்கொள்ளவும் தாய்நாட்டில் அண்மைய நிலவரம் குறித்துப் பகிர்ந்துகொள்ளவும் அமைந்த மதிப்புமிக்க வாய்ப்புகள் என்றார் அவர்.

மத்திய கிழக்கில் தமது பயணத்தின் இரண்டாவது பகுதியாக அவர் சவூதி அரேபியாவுக்குச் சென்றுள்ளதாகப் பதிவில் கூறினார்.

முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சராகவும் உள்ள திரு மசகோஸ், எகிப்தின் கெய்ரோவிலும் சவூதியின் மதினாவிலும் இஸ்லாமியக் கல்வி பயிலும் சிங்கப்பூர் மாணவர்களைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு தமக்குக் கிட்டியதாகக் குறிப்பிட்டார்.

கெய்ரோவில் உள்ள அல் அஸார் பல்கலைக்கழகத்தில் கிட்டத்தட்ட 170 சிங்கப்பூரர்கள் மாணவர்களாக உள்ளனர் என்றும் மதினா இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் 40க்கும் மேற்பட்டவர்கள் பயில்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

சிங்கப்பூரில், குறிப்பாக மலாய், முஸ்லிம் சமூகத்திற்கு முக்கியமாகக் கருதப்படும் விவகாரங்கள் தங்களது கலந்துரையாடல்களில் இடம்பிடித்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் இஸ்லாமியக் கல்விக் கல்லூரி உட்பட முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள் சிங்கப்பூரில் நடைமுறைப்படுத்தப்படுவதை மாணவர்கள் அறிந்திருப்பது தம்மை நெகிழ வைத்ததாக அவர் சொன்னார்.

சிங்கப்பூர் சூழலுக்கேற்ப சிங்கப்பூரின் முஸ்லிம் சமூகத்துக்கு வழிகாட்டும் எதிர்கால சமயக் கல்விமான்களைத் தயார்படுத்தும் ஒரு முக்கியக் கழகமாக இந்தக் கல்லூரி பார்க்கப்படுகிறது. 2028ஆம் ஆண்டு கல்லூரியின் முதல் மாணவர்த் தொகுப்பில் 60 மாணவர்கள் இணையவுள்ளனர்.

மேலும், சிங்கப்பூரின் இஸ்லாமிய சமய ஆசிரியர்களை நிபுணத்துவ நிலைக்குக் கொண்டுசெல்லவும் சிங்கப்பூரின் இஸ்லாமிய சமயக் கல்விக் கழகங்களை வலுப்படுத்த முயிஸ் தொடர்ந்து முயலும் என்று தாம் உறுதி கூறியதாக திரு மசகோஸ் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்