சிங்கப்பூரின் மொழிபெயர்ப்புச் சூழலை குறிப்பிடத்தக்க வகையில் வடிவமைத்த பத்துப் பேருக்குச் ‘சிறப்பு அங்கீகார விருது’ வழங்கி கௌரவித்தார் தேசிய வளர்ச்சி, தகவல், மின்னிலக்க மேம்பாட்டு மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ்.
தேசிய மொழிபெயர்ப்புக் குழுவின் முயற்சிகளுக்கு வலுவான ஆதரவு தந்தோர், சிறப்பாகப் பங்களித்தோர், குறிப்பாக ஆங்கிலம் தவிர்த்து சிங்கப்பூரின் இதர மூன்று அதிகாரத்துவ மொழிகள் தொடர்பிலான மொழிபெயர்ப்பு விவகாரத்தில் பெருமதிப்புமிக்க ஆலோசனைகள் வழங்கியோர் என அக்குழுவின் முன்னாள், இந்நாள் உறுப்பினர்களும் வளமைக் குழு உறுப்பினர்களும் விருதுகளைப் பெற்றனர்.
தமிழ்மொழிக்கான சிறப்பு அங்கீகார விருதுகள் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தின் இயக்குநரும், தமிழ்மொழி வளமைக் குழுவின் தலைவருமான திருவாட்டி சாந்தி செல்லப்பன், ஓய்வுபெற்ற முதன்மைத் தமிழாசிரியர் முனைவர் தமிழரசி சுப்பிரமணியம் ஆகியோருக்கு வழங்கப்பட்டன.
நாடாளுமன்ற முன்னாள் தமிழ் மொழிபெயர்ப்பாளர் அமரர் ஆ. பழனியப்பனுக்கு அவரது தனித்துவமிக்க சேவையைப் பாராட்டிச் சிறப்பு அங்கீகார விருது அறிவிக்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை (நவம்பர் 15) மாலை நடைபெற்ற தேசிய மொழிபெயர்ப்புக் குழுவின் பத்தாவது ஆண்டுநிறைவு விருந்து நிகழ்ச்சியில் அக்குழுவின் தலைவரான திரு டான் கியட் ஹாவ் சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில், சிங்கப்பூரின் மொழிபெயர்ப்புத் தரத்தை மேம்படுத்துவதில் சமூகத்தை இணைக்க உதவும் முயற்சிகளுக்குத் தோள்கொடுத்த அனைத்துப் பங்காளிகளுக்கும் அவர் நன்றி கூறினார்.
குறிப்பாக, குடிமக்கள் மொழிபெயர்ப்பாளர்களின் முக்கியத்துவம் குறித்துப் பேசிய திரு.டான், தற்போது மொழிபெயர்ப்புக்குச் சீரிய முறையில் பங்களிக்கும் அத்தகைய 2,500 பேர் உள்ளதாகவும் தெரிவித்தார்.
“ஒரு பிள்ளையை வளர்க்க ஒட்டுமொத்த சமூகத்தின் பங்களிப்பு தேவை எனச் சொல்லப்படுவதுண்டு. மொழிபெயர்ப்பைப் பொறுத்தவரை, சிங்கப்பூரின் மொழிபெயர்ப்புத் தரநிலைகளை உயர்த்த ஒரு சமூகத்தின் பங்களிப்பு அவசியமாகிறது,” என்றார் திரு டான்.
தொடர்புடைய செய்திகள்
முன்னதாக, தேசிய மொழிபெயர்ப்புக் குழுவின் பத்தாவது ஆண்டுநிறைவுக் கொண்டாட்டத்தைக் குறிக்கும் வகையில், ‘சொற்சரம்: சமூகங்களை என்றென்றும் ஒன்றிணைக்கும் மொழிபெயர்ப்பு’ எனும் நூல் வெளியீடு கண்டது.
நான்கு அதிகாரத்துவ மொழிகளிலும் வெளியிடப்பட்ட இந்நூல், மொழிபெயர்ப்புச் சமூகத்தின் பத்தாண்டுப் பயணம், அதனோடு இழையோடும் புதிய தொழில்நுட்பப் பயன்பாடு, தொழில்சார் மேம்பாட்டு ஆதரவு, அடுத்த தலைமுறைத் திறனாளர்கள் உருவாக்கம் ஆகியவை குறித்து விவரிக்கிறது.