தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மாதம் ஒரு தமிழ்நூல் வாசிக்க அமைச்சர் சண்முகம் ஊக்குவிப்பு

3 mins read
சிங்கப்பூர், மலேசிய, இந்தியத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை ஒருசேரக் காட்சிப்படுத்தியுள்ள திருவிழா
a9f61bec-75ce-4791-96de-c7cd4a95663e
உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம், சிவப்பு நாடாவை வெட்டி தமிழ்ப் புத்தகத் திருவிழாவைத் தொடங்கி வைக்கிறார்.  - படம்: சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்

இளையர்களைத் தமிழ் நூல்களின்பால் ஈர்ப்பது சவாலாக இருந்தாலும் சமூக ஊடகங்கள், வலையொலிகள் போன்ற நவீன ஊடக முறைகளுடன் தமிழ் இலக்கியத்தை இணைக்கலாம்.

இது, தமிழ் இலக்கியத்தை இளையர்கள் மேலும் எளிதாக அணுக வகைசெய்யும் என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்திருக்கிறார்.

விக்டோரியா சாலையில் உள்ள தேசிய நூலக வாரியக் கட்டடத்தில் நடைபெற்றுவரும் ‘எஸ்ஜி60’ தமிழ்ப் புத்தகத் திருவிழாவின் முதல் நாள் திறப்புவிழாவில் உரையாற்றியபோது திரு சண்முகம் அவ்வாறு கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை (மே 11) வரை நடைபெறவுள்ள இந்தத் திருவிழாவில் சிங்கப்பூர், மலேசியா, இந்தியா ஆகிய மூன்று நாடுகளையும் சேர்ந்த பதிப்பாளர்களின் நூல்கள், மொத்தம் 20 புத்தகக்கூடங்களில் விற்கப்படுகின்றன.

சிங்கப்பூரில் முதன்முறையாக நடந்தேறும் இந்தப் புத்தக விழா, நாட்டின் 60ஆவது சுதந்திர ஆண்டைக் கொண்டாடும் வேளையில் நடைபெறுவது அர்த்தமிக்கதாக உள்ளது என்று திரு சண்முகம் தம் உரையில் குறிப்பிட்டார்.

“வண்ணத் திரைச்சீலைபோல் பல பண்பாடுகளின் கலவையாகத் திகழும் சிங்கப்பூரில் தமிழ்மொழியின் விலைமதிப்பற்ற பங்களிப்பை உணர்ந்து பார்க்கும் மிக முக்கியமான நிகழ்ச்சி இது. அதே வேளையில், தலைமுறை தலைமுறையாகக் கொண்டுசேர்க்கப்பட்ட கால எல்லையற்ற அறிவையும், கற்பனை வளத்தையும் பகிர்ந்துகொள்ளும் மிக முக்கியமான தருணமும்கூட,” என்றார் அமைச்சர்.

‘மகாகவி காளிதாஸ்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘பல்லக்கு பரிவாரம் படையுடன் முடி உந்தன் சொல்லுக்கு விலையாகுமே’ என்ற பாடல் வரிகளைத் தமது உரையின்போது குறிப்பிட்ட திரு சண்முகம், இத்தகைய அருமையான வரிகளை அடுத்த தலைமுறையினருக்கு நாம் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மலேசியப் பதிப்பு நிறுவனமான ஜெயபக்தி புத்தகக் கூடத்தில் நூல் ஒன்றை எடுத்துப் பார்க்கும் அமைச்சர் சண்முகம்.
மலேசியப் பதிப்பு நிறுவனமான ஜெயபக்தி புத்தகக் கூடத்தில் நூல் ஒன்றை எடுத்துப் பார்க்கும் அமைச்சர் சண்முகம். - படம்: சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்

தமிழ் நூல்கள் ஆற்றல்மிக்க பாலங்களாகவும் முக்கியமான பண்பாட்டு மரபுகளாகவும் செயல்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

“இத்திருவிழாவில் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகியவற்றின் நூல் வெளியீட்டாளர்கள் ஒன்றிணைந்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. பதினாறு அமைப்புகளுடன் தமிழ் எழுத்தாளர் கழகம் முன்னெடுத்துள்ள இந்தக் கூட்டுறவு நமது தமிழ் இலக்கிய சமுதாயத்தின் வலிமையையும் எல்லையையும் எடுத்துக்காட்டுகிறது,” என்றார் திரு சண்முகம்.

அதே நேரத்தில், இளையர்கள் பலரும் தமிழ் இலக்கியத்துடனான தொடர்பைப் படிப்படியாக இழந்துவருவதாக அவர் சுட்டினார். டிக்டாக், இன்ஸ்டகிராம் போன்ற சமூக ஊடகங்களில் நேரம் செலவிடும் இளையர்களை வாசிப்பின் பக்கம் திருப்புவது சவாலாக உள்ளதாகவும் அவர் சொன்னார்.

“எனினும், இந்தச் சவாலுக்கிடையே ஒரு வாய்ப்பும் இருக்கிறது. மின்னிலக்கத் தளங்களை மிரட்டலாகக் கருதாமல் அவற்றின் திறனை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,” என்று அமைச்சர் அறிவுறுத்தினார்.

இளையர்களின் மொழியிலேயே உரையாடி, அவர்களுடன் அர்த்தமுள்ள, இயல்பான முறையில் தொடர்பாட வேண்டும் என்றும் அவர் கூறினார். மாதம் ஒரு தமிழ்நூலை வாசிக்கும்படியும் அவர் ஊக்குவித்தார்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் உரையாற்றிய எழுத்தாளர் கழகத்தின் தலைவர் நா. ஆண்டியப்பன், பல்வேறு சவால்களைக் கடந்து புத்தகத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

‘கடைவிரித்தேன் கொள்வாரில்லை’ என்ற நிலைக்கு மாறாக, சிங்கப்பூர் மக்கள் மனம் வைத்தால் புத்தக விழா உறுதியாக வெற்றியடையும் என்றார் திரு ஆண்டியப்பன்.

“உங்களுடன் குடும்பத்தினரையும் நண்பர்களையும் அழைத்து வாருங்கள். மாணவர்களுக்கு இலவசப் பற்றுச்சீட்டுகளை வழங்குகிறோம், அவர்களையும் அழைத்து வாருங்கள்,” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்